Sophia affair: Why does not arrest the S.V.Sekar?, After the court order : M K Stalin Question

மு.க.ஸ்டாலின் விடுத்துள்ள அறிக்கை :

“பாசிச பா.ஜ.க அரசு ஒழிக” என்று தமிழக பா.ஜ.க தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் முன்னிலையில் முழக்கமிட்டார் என்ற ஒரே காரணத்திற்காக, ஆராய்ச்சி மாணவி சோபியா மீது போலீசிடம் புகாரளித்து, சோபியாவை அவசர அவசரமாக கைது செய்ததற்கு கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

ஜனநாயக நாட்டில் ஓர் ஆட்சி ஒழிக என்று கூறுவதற்கு கூட உரிமையில்லை என்ற நிலை பா.ஜ.க மத்தியில் ஆட்சியிலிருப்பதாலும், மாநிலத்தில் பா.ஜ.க.விற்கு ஜால்ரா அடிக்கும் அடிமை ஆட்சி நீடிப்பதாலும் உருவாகியிருப்பது மிகுந்த வேதனையளிக்கிறது.

“மாற்றுக் கருத்து தெரிவிப்பது ஜனநாயகத்திற்கு ஒரு பாதுகாப்பு வால்வு (safety valve)” என்று உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்து ஒரு வாரம் கூட ஆவதற்குள் தமிழகத்தில் இப்படியொரு அராஜகமான, அத்துமீறிய கைதை தமிழக காவல்துறை அரங்கேற்றியது “காவி மயத்திற்கு” சில காவல்துறை அதிகாரிகளும் அடி பணிந்து கிடக்கிறார்களோ என்ற சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

விடுதலைச் சிறுத்தைகள் பொதுச் செயலாளர் திரு ரவிக்குமாருக்கு மதவெறியர்களால் அச்சுறுத்தல் என்றால் காவல்துறை கண்டு கொள்வதில்லை. அரசியல் நாகரீகமற்ற வகையில் அருவருக்கத்தக்க கருத்துகளை தெரிவித்த திரு எஸ்.வி. சேகரை உயர்நீதிமன்றமே உத்தரவிட்டும் கைது செய்யவில்லை.

வெறுப்பூட்டும் பேச்சுக்களையும், மத துவேஷத்தைப் பரப்பும் கருத்துகளையும், தினமும் தெரிவிக்கும் பா.ஜ.க.வைச் சேர்ந்த திரு எச் ராஜா மீது புகார் கொடுத்தால் வழக்குப் பதிவு செய்யவே நீதிமன்றத்தில் ஆணை பெற வேண்டியதிருக்கிறது.

எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் பற்றி பா.ஜ.க. வினரும், அக்கட்சியின் துணை அமைப்புகளில் இருப்போரும், சமூக வலைதளங்களில் வெளியிடும் மிரட்டல் கருத்துக்களுக்கும், சினிமா துறையில் இருப்போரை அச்சுறுத்தும் வகையில் போராடுவோர் மீதும், தமிழக காவல்துறை எவ்வித நடவடிக்கையும் எடுப்பதில்லை.

ஆனால், “முழக்கமிட்டார்” என்ற ஒரே காரணத்துக்காக விமான நிலையத்திலேயே புகாரைப் பெற்றுக்கொண்டு, அங்கேயே மாணவி சோபியாவை கைது செய்தது காவல்துறையின் அப்பட்டமான அதிகார துஷ்பிரயோகத்தைக் காட்டுகிறது.

மாணவியை கைது செய்யத் தூண்டியது மட்டுமின்றி, அந்த மாணவியை தன் கட்சிக்காரர்களை வைத்தே மிரட்ட வைத்து அநாகரிகமாகப் பேசியதை பா.ஜ.க. மாநிலத் தலைவர் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தது மிகவும் வேதனையளிக்கிறது.

தமிழகத்தில் தங்களின் பினாமி அ.தி.மு.க அரசு பதவியில் நீடிப்பதால் எந்த அராஜகங்களிலும் ஈடுபடலாம், எந்த அரங்கத்திலும் கலாட்டா செய்யலாம், வன்முறை கருத்துக்களை எங்கும் விதைக்கலாம் என்று நினைத்து, சமூக நல்லிணக்கத்திற்கு ஊறு விளைவிக்கும் செயல்களில் மாநிலத்தில் உள்ள பா.ஜ.க.வினரும், அவர்களின் துணை அமைப்பில் உள்ளவர்களும் திட்டமிட்டு செயல்படுவது, தமிழகத்தில் நிலவும் அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் செயல் என்பதை பா.ஜ.க. மாநில தலைவரோ, அக்கட்சியில் வெறுப்புப் பேச்சுக்களை பேசுவோரோ உணரவில்லை என்பது அதிர்ச்சியளிக்கிறது.

ஜனநாயக நாட்டில் “பா.ஜ.க. ஆட்சி” மட்டுமல்ல, எந்தக் கட்சியின் ஆட்சி மீதும் விமர்சனம் செய்யும் அடிப்படை உரிமை, நாட்டின் ஒவ்வொரு குடிமகனுக்கும் உண்டு. அந்த சுதந்திரத்திற்கும் வேட்டு வைக்கும் வகையில் பா.ஜ.க. மாநிலத் தலைவர் செயல்பட்டிருப்பது, ஜனநாயகத்தின் மீதும், கருத்துக்கு மாற்றுக் கருத்துக் கூறுவதிலும் நம்பிக்கையிழந்து, “சகிப்புத்தன்மையே உன் விலை என்ன?” என்று கேள்வி கேட்பது போல் அமைந்து விட்டது.

மாணவியின் உணர்வுகளை புரிந்து கொள்ள ஒரு அரசியல் கட்சியின் தலைவர் மறுத்து, சட்டத்தைக்காட்டி மிரட்டுவதின் மூலம் அடக்க நினைப்பது அபாயகரமான போக்கு என்றே கருதுகிறேன்.

இந்நிலையில் நீதித்துறை, மாணவி சோபியாவிற்கு ஜாமீன் அளித்துள்ளதற்கு வரவேற்பு தெரிவித்துக் கொள்கிறேன். அந்த மாணவி மீது கொடுக்கப்பட்டுள்ள புகாரின் அடிப்படையில் போடப்பட்டுள்ள வழக்கை, தமிழக அரசு உடனடியாகத் திரும்பப் பெற்று, மாணவி சோபியா தனது ஆராய்ச்சிப் படிப்பை தொடர அனுமதிக்க வேண்டும் என்று தமிழக அரசை கேட்டுக் கொள்கிறேன்.

மாணவி சோபியாவிற்கு மிரட்டல் விடுத்து அநாகரிகமாக பேசியது தொடர்பாக பா.ஜ.க.வினர் மீது அவரது தந்தை அளித்துள்ள புகாரின் மீது நடவடிக்கை எடுத்து, அவர்களை உடனடியாக கைது செய்து, இது போன்று வெறுப்பு விதைகளை விதைக்கும் பா.ஜ.க.வினரின் செயலுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறேன்.

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2024 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!