Sports incident near Perambalur: 3 out of 4 arrested for attacking innocent! Police looking for another!
பெரம்பலூர் மாவட்டம் மேலப்புலியூர் அருகே உள்ள நாவலூர் கிராமத்தை சேர்ந்தவர் தர்மராஜ் மகன் வெங்கடேசன்(25) இவர் ஹோட்டல் மேனேஜ்மென்ட் படித்துள்ளார். இந்நிலையில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு அரசு வேலைக்காக லாடபுரம் கிராமத்தைச் சேர்ந்த ஒருவரிடம் பணம் கொடுத்து வேலையும் கிடைக்காமல், கொடுத்த பணமும் திரும்ப கிடைக்காமல் ஏமாற்றப்பட்டு விட்டதாக கூறப்படுகிறது. இதனால் பாதிக்கப்பட்ட வெங்கடேசன் மன உளைச்சல் காரணமாக சற்று மனநலம் பாதிக்கப்பட்டு ஊரை சுற்றி வந்துள்ளார். மேலும் வீட்டில் உள்ளவர்களிடம் சிறு சிறு தகராறு செய்வதும், பணம் கேட்டு தொந்தரவு செய்வதையும் வெங்கடேசன் வழக்கமாக செய்துள்ளார்.
இந்நிலையில் எந்தவித காரணமும் இன்றி, வெங்கடேசனை அதே ஊரைச் சேர்ந்த சில இளைஞர்கள் தனியாக அழைத்துச் சென்று மதுபோதையில் தாக்குதல் நடத்தியுள்ளனர். தொடர்ந்து பல்வேறு நாட்களில், பல்வேறு இடங்களில் இது போன்று தாக்குதல் நடத்தியவர்கள் ஒரு கட்டத்தில் அவரை கட்டிப்போட்டு ரத்தம் சொட்ட தடிகளால் தாக்கியதோடு, மது பாட்டிலை உடைத்து குத்தி கொலை செய்து விடுவதாக மிரட்டி உள்ளனர். வலி தாங்க முடியாமல் வெங்கடேசன் கதறி அழுதுள்ளார். இதுபோன்று தாக்குதலினால், ஒருவேளை வெங்கடேசன் உயிரிழந்து விட்டால் என்ன செய்வது என்று யோசித்த அந்த போதை கும்பல் தனது சாவுக்கு தானே காரணம் என்று வெங்கடேசனிடம் வாக்குமூலமும் பெற்று அதனையும், இவர்கள் தாக்கிய சம்பவங்களையும் வீடியோவாக காட்சிப்படுத்தி வைத்திருந்துள்ளனர்.
தாக்குதலில் ஈடுபட்ட வாலிபர்களில் ஒருவரே இந்த வீடியோக்களை தனது செல்போனில் படம் எடுத்துள்ளார். இந்நிலையில் இந்த வீடியோ நேற்று 1ம் தேதி காலை திடீரென சமூக வலைதளங்களில்வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனை தொடர்ந்து பெரம்பலூர் நகர போலீசார், நாவலூர் கிராமத்திற்கு சென்று விசாரணை நடத்தியதில், அதே ஊரைச் சேர்ந்த முருகவேல்(27), ரஞ்சித்(30) அருண்(19) மற்றும் நிகாஷ்(17) ஆகிய நான்கு பேர் இந்த கொடூர சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் என்பதை கண்டறிந்தனர்.
இதனை தொடர்ந்து 294(b),323,324,506(ii) IPC 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து, முருகவேல், அருண் மற்றும் நிகாஷ் ஆகிய 3 பேரையும் கைது செய்த போலீசார், அவர்களில் 17 வயது மட்டுமே ஆன நிகாஷை தவிர்த்து மற்ற இரண்டு பேரையும் பெரம்பலூர் நீதிமன்றத்தில் ஆஜர் செய்து சிறையில் அடைத்தனர். மேலும் தலைமறைவாக உள்ள ரஞ்சித் என்பவரை தேடி வருகின்றனர். இது மட்டுமின்றி இவர்கள் வெங்கடேசன் வீட்டுக்கே சென்று அவரை அழைத்து வந்து மிரட்டியதோடு, அவர் வீட்டில் உள்ளவர்களையும் மிரட்டியதாக கூறப்படுகிறது. மேலும் இந்த கொடூர தாக்குதலுக்கு எந்த விதமான முன் விரோதமும் காரணமும் இல்லை என்றும் இவர்கள் இதனை பொழுதுபோக்காகவே செய்துள்ளனர் என்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.