Tamilnadu Government should introduce a flag that is Tamil: KMDK General Secretary E.R.Eswaran
தமிழக மக்கள் அனைவருக்கும் தமிழ்நாடு தின வாழ்த்துக்களை தெரிவித்துள்ள கொமதேக பொதுச்செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தி:
தமிழர்கள் அனைவரும் வளர்ச்சியில் தமிழகம் பின்தங்கியுள்ள இந்த சூழ்நிலையில் தமிழன் என்ற தனி உணர்வோடு ஒற்றுமைப்பட வேண்டும். மதம், சாதி கடந்து அரசியல் வேறுபாடுகளை மறந்து, தனிமனித பகை உணர்வுகளை ஒதுக்கி வைத்துவிட்டு தமிழ் மொழியை பேசுகின்ற ஒவ்வொரு தமிழனும் தமிழகத்தின் வளர்ச்சிக்காக, தமிழர்களின் உரிமைக்காக ஒன்றுபட்டு ஓங்கி குரல் கொடுக்க வேண்டும். இந்த உறுதிமொழியை ஏற்கின்ற தினமாக தமிழ்நாடு தினம் விளங்க வேண்டும்.
பல விழாக்களை கொண்டாடுகின்ற தமிழக அரசு மொத்த தமிழர்களையும் ஒரே உணர்வோடு ஒருங்கிணைக்க கூடிய இந்த தமிழ்நாடு தினத்தை வெகு விமரிசையாக கொண்டாட வேண்டும். பக்கத்து மாநிலங்கள் எல்லாம் மொழிவாரியாக மாநிலம் பிரிக்கப்பட்ட தினத்தை இந்த உணர்வுகளோடு கொண்டாடும் போது தமிழகம் ஏன் அதில் கவனம் செலுத்தாமல் இருக்கிறதென்பது வியப்பாக இருக்கிறது.
மாநிலத்தின் உரிமைகளை மத்திய அரசிடமிருந்து பெறுவதற்கு இந்த ஒற்றுமை தேவைப்படுகிறது. உலகம் பூராவும் பரவி வாழ்கின்ற தமிழர்கள் தங்களுக்குள்ளான உறவுகளை மேம்படுத்திக் கொள்ள இந்த தினத்தில் உறுதி எடுப்போம்.
அனைத்து கட்சி கொடிகளையும் தாண்டி தமிழனுக்கு என்று ஒரு கொடியை தமிழக அரசு அறிமுகப்படுத்த வேண்டும். தமிழர்கள் அனைவருக்கும் தமிழ்நாடு தின வாழ்த்துக்கள்.