To eliminate cases of fire crackers in Deepavali on the KMDK founder ER Eswaran’s request
தீபாவளியன்று பட்டாசு வெடித்தற்காக போடப்பட்ட வழக்குகளை உடனடியாக ரத்து செய்ய வேண்டும். வேறு எந்த மாநிலத்திலும் வழக்குகள் கிடையாது என கொங்குநாடு மக்கள் முன்னேற்ற கட்சியின் நிறுவனர் ஈ.ஆர். ஈஸ்வரன் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
பட்டாசுகள் வெடிப்பதால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுகிறது என்று பட்டாசுகளுக்கு தடைவிதிக்க கோரிய வழக்கில் உச்சநீதிமன்றம் தீபாவளி பண்டிக்கையின் போது 2 மணி நேரம் மட்டுமே பட்டாசுகள் வெடிக்க வேண்டுமென்று உத்தரவிட்டிருந்தது.
இந்த உத்தரவை தமிழக அரசு காலையில் 1 மணி நேரமும், இரவில் 1 மணி நேரமுமாக பிரித்து பட்டாசு வெடிக்க தமிழக மக்களை அறிவுறுத்தியிருந்தது.
தீபாவளியன்று தமிழக அரசு அறிவித்திருந்த நேரத்தை மீறி பட்டாசுகள் வெடித்ததாக தமிழகம் முழுவதும் 2000–க்கும் மேற்பட்டோர் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. டெல்லியில் சுற்றுச்சூழல் பாதிப்பு அதிகமாக இருப்பதால் கடந்த ஆண்டு தீபாவளியின் போதே பட்டாசுகள் விற்கவும், வெடிக்கவும் டெல்லி உயர்நீதிமன்றம் தடை விதிக்கப்பட்டத்தை நாம் அறிவோம். ஆனால் தமிழகத்தில் அதுபோன்ற சூழல் கிடையாது.
டெல்லியில் சில வழக்குகள் போடப்பட்டாலும் இந்தியா முழுவதும் மற்ற மாநிலங்களில் எந்தவொரு வழக்கும் போடப்படவில்லை. பட்டாசுகள் இந்த நேரத்திற்குள்தான் வெடிக்க வேண்டுமென்ற கட்டுப்பாடு தமிழகத்திற்கும், தமிழக மக்களுக்கும் இதுவே முதல் முறை.
தமிழக அரசு அறிவுறுத்திய நேர விவரம் தமிழக மக்கள் அனைவருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. குறிப்பாக தீபாவளியன்று மகிழ்ச்சியின் உச்சத்தில் இருக்கும் சிறுவர்கள் தமிழக அரசு விதித்த கட்டுப்பாடுகளை கடைபிடிப்பது சிரமம் என்பதை அனைவரும் ஒத்துக்கொள்ள வேண்டும். தமிழக அரசு அறிவுறுத்திய நேரத்தை மீறி சிறுவர்கள் பட்டாசுகள் வெடித்தற்காக பெற்றோர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டிருப்பது ஏற்புடையதல்ல.
பல வருடங்களாக நடைமுறையில் இருக்கும் சட்டங்களையே அன்றாட வாழ்க்கை முறையில் மக்கள் சரிவர பின்பற்ற முடியாத சூழல் இருக்கும் நிலையில், முதல் முறையாக பட்டாசுகள் வெடிப்பதற்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளை தமிழத்தில் பெரும்பாலான மக்கள் பின்பற்றியிருப்பது பாராட்டுதலுக்குரியது.
சென்ற ஆண்டை விட இந்த ஆண்டு காற்று மாசு அளவு வெகுவாக குறைந்திருப்பதை தமிழக மாசுக்கட்டுப்பாட்டு வாரியமே உறுதி செய்திருக்கிறது.
எனவே பட்டாசுகள் வெடிக்க விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் தமிழகத்திற்கு முதல் முறை என்பதால் தமிழக அரசு அறிவுறுத்திய நேரத்தை மீறி தீபாவளியன்று பட்டாசுகள் வெடித்ததாக போடப்பட்ட வழக்குகள் அனைத்தையும் ரத்து செய்ய தமிழக முதல்வர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும், என கோரிக்கை விடுத்துள்ளார்.