Wearing a helmet life: to become a reflex action! PMK Ramadoss

பா.ம.க. நிறுவனர் விடுத்துள்ள மருத்துவர் இராமதாசு அறிக்கை :

தமிழ்நாட்டில் இரு சக்கர வாகனங்களில் பயணம் செய்யும் இருவரும் தலைக்கவசம் அணிய வேண்டும், மகிழுந்துகளில் பயணிப்பவர்கள் கட்டாயம் இருக்கைப் பட்டை அணிய வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது. சாலை விபத்துகளில் உயிரிழப்புகளை கட்டுப்படுத்த வேண்டும் என்ற நல்ல நோக்கத்துடன் உயர்நீதிமன்றம் அளித்துள்ள இந்தத் தீர்ப்பு வரவேற்கத்தக்கது ஆகும்.

சென்னை உயர்நீதிமன்றத்தின் இந்த ஆணை புதிதல்ல. மோட்டார் வாகனச் சட்டத்தில் ஏற்கனவே இருக்கும் பிரிவைத் தான் செயல்படுத்த உயர்நீதிமன்றம் ஆணையிட்டிருக்கிறது. தமிழகத்தில் 1985-ஆம் ஆண்டு மார்ச் 8-ஆம் தேதி பிறப்பிக்கப்பட்ட உள்துறை (போக்குவரத்து) அரசாணை மூலம் தலைக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டது. பின்னர் 1989-ஆம் ஆண்டு ஜூன் 26-ஆம் தேதி பிறப்பிக்கப்பட்ட அதே துறையின் அரசாணை மூலம் தலைக்கவசம் அணிவது கட்டாயமில்லை என்று அறிவிக்கப்பட்டது. எனினும் நீதிமன்ற ஆணைகளின்படி, சென்னை, மதுரை, கோவை, நெல்லை, திருச்சி, சேலம் ஆகிய 6 நகரங்களில் 01.06.2007 முதலும், தமிழகத்தின் மற்ற பகுதிகளில் 01.07.2007 முதலும் தலைக்கவசம் அணிவது மீண்டும் கட்டாயமாக்கப்பட்டது. ஆனால், இது முறையாக நடைமுறைப்படுத்தப்படாததன் காரணமாகவே சென்னை உயர்நீதிமன்றம் இப்போது தலையிட்டு இந்த ஆணையை பிறப்பித்துள்ளது.

இரு சக்கர வாகனங்களில் செல்வோரில் பெரும்பான்மையினர் தலைக்கவசம் அணிவதை தலையாயக் கடமையாக கருதி பின்பற்றுவதையும், குறைந்த எண்ணிக்கையிலானவர்களிடையே தலைக்கவசம் அணிவதற்கு எதிரான முணுமுணுப்புகள் இருப்பதையும் நான் அறிவேன். ஆனால், அவை ஏற்கத்தக்கதல்ல. இரு சக்கர வாகனங்களில் செல்லும் இருவரும் தலைக்கவசம் அணிவதில் சிரமங்கள் உள்ளன; வாகனமே ஓட்டத் தெரியாதோருக்கு ஓட்டுனர் உரிமம் வழங்கும் அளவுக்கு போக்குவரத்துத் துறையில் தலைவிரித்தாடும் ஊழலை சரி செய்யாமல் தலைக்கவசம் அணிவதை கட்டாயமாக்குவதால் என்ன பயன்?; சாலைகளில் உள்ள குண்டு குழிகளை சரி செய்ய ஆணையிடாத நீதிமன்றங்கள் அப்பாவி மக்கள் மீது தலைக்கவசத்தை திணிப்பது நியாயமா? என எதிர்ப்புக் குரல்கள் எழுவது எனது செவிகளுக்கும் கேட்கிறது. இந்த வினாக்களில் நியாயம் இருக்கலாம்… ஆனால், தர்க்கம் இல்லை என்பதே உண்மை.

சாலைகளில் உள்ள குண்டு குழிகள் சரி செய்யப்பட வேண்டும்; ஓட்டுனர் உரிமம் வழங்குவதில் நடக்கும் ஊழல்கள் கட்டுப்படுத்த வேண்டும் என்பதெல்லாம் சரி தான். ஆனால், இவையெல்லாம் சரி செய்யப்பட்ட பிறகு தான் தலைக்கவசத்தை கட்டாயமாக்க வேண்டும் என்று கூறுவது நமது உயிருக்கு நாமே வைத்துக் கொள்ளும் வேட்டு ஆகும். மேற்குறிப்பிட்ட குறைபாடுகள் சரி செய்யப்படாத வரை சாலைகளில் நடக்கும் விபத்துகளில் தலையில் அடிபடாது என்றோ, அடிபட்டாலும் உயிரிழப்பு ஏற்படாது என்றோ யாரால் உத்தரவாதம் அளிக்க முடியும்? யாராலும் உத்தரவாதம் அளிக்க முடியாது எனும் போது அத்தகைய எதிர்ப்புக் குரல்கள் வாதத்திற்கு வேண்டுமானால் உதவும்; வாழ்க்கைக்கு உதவவே உதவாது. மகிழுந்துகளில் இருக்கைப் பட்டை அணிவதற்கு எதிரான கருத்துகளுக்கும் இந்த விளக்கம் பொருந்தும்.

சாலை விபத்துகளில் தமிழகம் தான் முதலிடத்தில் உள்ளது என்பதால் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் தலைக்கவசம் அணிவதிலும், இருக்கைப் பட்டை அணிவதிலும் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். 2016-ஆம் ஆண்டில் நிகழ்ந்த சாலை விபத்துகளில் தலைக்கவசம் அணியாததால் 4091 பேர் உயிரிழந்தனர். 2017-ஆம் ஆண்டில் தலைக்கவசம் கட்டாயமாக்கப்பட்டதால் இது 2956 ஆக குறைந்தது. இதை மேலும் குறைக்க இருசக்கர வாகனங்களில் செல்லும் இருவரும் தலைக்கவசம் அணிவது கட்டாயம் ஆகும்.

அதேபோல், மகிழுந்து விபத்துகளில் உயிரிழப்பு அதிகரிப்பதற்கு இருக்கைப் பட்டை அணியாதது தான் மிக முக்கியக் காரணம் ஆகும். கடந்த ஆகஸ்ட் 29-ஆம் தேதி ஆந்திராவில் நிகழ்ந்த சாலை விபத்தில் அம்மாநில முன்னாள் முதலமைச்சர் என்.டி.ராமராவின் புதல்வர் பாலகிருஷ்ணா உயிரிழந்தார். அனைத்து வசதிகளும் கொண்ட மகிழுந்தில் அவர் பயணித்தாலும் இருக்கைப்பட்டை அணியாததால் பாதுகாப்பு அம்சங்கள் எதுவும் செயல்படவில்லை. அதனால் அவர் உடல் நசுங்கி உயிரிழக்க நேர்ந்தது.

அலுவல் மற்றும் வேறு காரணங்களுக்காக வீட்டை விட்டு வாகனங்களில் புறப்படுவோர் தங்களுக்காக வீட்டில் காத்திருக்கும் மனைவி, குழந்தைகளை ஒரு நிமிடம் நினைத்துப் பார்த்தால் தலைக்கவசம் அணிவதும், இருக்கைப் பட்டை அணிவதும் அனிச்சை செயலாக மாறி விடும். இந்த விஷயங்களில் இதுவரை அலட்சியமாக இருந்தவர்கள் கூட இனி வெளியில் செல்லும் போது காலனி – கைக் கடிகாரம் அணிவது போன்று தலைக்கவசம், இருக்கைப் பட்டை அணிவதை வழக்கமாக்கிக் கொள்ள வேண்டும், என தெரிவித்துள்ளார்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!