சேலம் பசுமை வழிச்சாலை திட்டத்திற்கு எதிராக பச்சைப் பொய்கள் கூறி மக்களை ஏமாற்ற சில முயற்சிப்பதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். சேலம் மாவட்டத்தில் மத்திய கூட்டுறவு வங்கியின் மல்லியக்கரை, கருப்பூர் கிளைகள், கருப்பூர் காவல் நிலைய கட்டிடங்கள் போன்றவற்றின் திறப்பு விழா உள்ளிட்ட பல்வேறு நலப்பணிகள் தொடக்க விழா, புதிய திட்டங்களின் அடிக்கல் நாட்டு விழா எடப்பாடியில் இன்று நடைபெற்றது. எடப்பாடி அரசு உயர்நிலைப் பள்ளியில் நடந்த இந்த விழாவில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, சேலம் – சென்னை பசுமைவழிச்சாலை திட்டத்தை மிகப்பெரிய பிரச்சினையாக்க சிலர் முயல்வதாக குற்றம்சாட்டிய முதலமைச்சர், நாடு முன்னேற்றம் அடைய சாலைத்திட்டங்கள் போன்ற உட்கட்டமைப்பு வசதிகள் அவசியம் என்று குறிப்பிட்டார்.தி.மு.க. ஆட்சியில் சாலை அமைக்க நிலம் எடுத்ததாக குறிப்பிட்ட முதலமைச்சர், அ.தி.மு.க அரசு நிலம் எடுத்து சாலை அமைக்க கூடாதா என்றும் வினவினார். பசுமைவழிச்சாலையால் சென்னை – சேலம் இடையே பயணத்தொலைவு 60 கிலோ மீட்டர் குறைந்து, சரக்கு போக்குவரத்து கட்டணமும், பொருள்களின் விலையும் குறையும் என்று எடப்பாடி பழனிசாமி விளக்கமளித்தார். பசுமைவழிச்சாலை திட்டத்துக்கு எதிராக பச்சைப் பொய் கூறப்படுவதாக குற்றம்சாட்டி முதலமைச்சர், அரசியல்ரீதியாக அதிமுக அரசை எதிர்க்க முடியாதவர்கள் பச்சை பொய்களை கூறி மக்களை ஏமாற்ற நினைப்பதாக சாடினார். விழாவைத் தொடர்ந்து, ஆலச்சம்பாளையம் – ஆவணியூர் இடையே பதினேழரை கோடி ரூபாய் மதிப்பில் அமைக்கப்பட்ட புறவழிச்சாலையில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கொடியசைத்து போக்குவரத்தை தொடங்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களுடன் பேசிய அவர், காவிரி டெல்டா மாவட்டங்களில் மூன்றரை லட்சம் ஏக்கரில் குறுவை சாகுபடிக்கான பணிகளைத் தொடங்க முதல்முறையாக குறுவை தொகுப்புத்திட்டம் மூலம் போதிய நிதி ஒதுக்கப்பட்டிருப்பதாகக் கூறினார். தற்போது கர்நாடகாவின் கபினி பகுதியில் நல்ல மழை பெய்து வருவதால் தமிழகத்துக்கு வரும் தண்ணீரின் அளவு அதிகரித்திருப்பதாகவும் முதலமைச்சர் தெரிவித்தார்.