பெரம்பலூர்: நடைபெற இருக்கும் சட்டமன்ற 2016 பொதுத் தேர்தலை முன்னிட்டு, தேர்தலை அமைதியாகவும், சமுகமாகவும் நடத்திட பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அதன் அடிப்படையில் பெரம்பலூர் மாவட்டத்தில் இயங்கும் டாஸ்மாக் கடைகள் முறையாக இயங்குகிறதா என்பது குறித்தும், கள்ளத்தனமாக மது விற்பனை ஏதேனும் நடைபெறுகிறதா என்பது குறித்தும் துறைரீதியிலான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அதன்படி கடந்த 30.04.16 அன்று மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் போது வேப்பந்தட்டை வட்டம் கள்ளப்பட்டி கிராமத்தை சேர்ந்த பழனி என்பவர் அவரது வீட்டில் கள்ளதனமாக மது விற்பது கண்டறியப்பட்டு அவரிடமிருந்து 5 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
அதேபோல் 01.05.16 அன்று மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் எசனை கிராமம் அம்பேத்கர் நகரை கலைவாணன் என்பவர் கள்ளத்தனமாக மது விற்பது கண்டறியப்பட்டு அவரிடமிருந்து 7 மதுபாட்டில்களும், அரும்பாவூர் கிராமத்தை சேர்ந்த குமார் என்பவர் கள்ளதனமாக மது விற்பது கண்டறியப்பட்டு அவரிடமிருந்து 33 மதுபாட்டில்களும், காரை கிராமத்தை சேர்ந்த பூபதி என்பவர் கள்ளதனமாக மது விற்பது கண்டறியப்பட்டு அவரிடமிருந்து 14 மதுபாட்டில்களும் பறிமுதல் செய்யப்பட்டு காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டது. மேற்கண்ட நபர்கள் மீது வழக்கு பதிவும் செய்யப்பட்டுள்ளது.