மஹாராஷ்டிராவில் உள்ள பேங்க் ஆப் மஹாராஷ்டிரா வங்கியின் இயக்குநரைக் கைது செய்யும் அரசு, பாஜக தலைவர் அமித் ஷா மீது எந்த நடவடிக்கையும், விசாரணையும் எடுக்காதது ஏன் என மஹாராஷ்டிரா நவ நிர்மான் சேனா கட்சித் தலைவர் ராஜ் தாக்கரே கேள்வி எழுப்பியுள்ளார்.மஹாராஷ்டிரா நவநிர்மான் சேனா கட்சியின் தலைவர் ராஜ் தாக்கரே மும்பையில் நிருபர்களுக்குப் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:புனேயில் உள்ள பேங்க் ஆப் மஹாராஷ்டிரா வங்கியில், டிஎஸ்கே குழுமத்துக்குக் கடன் கொடுத்த வகையில் ரூ.2 ஆயிரம் கோடி மோசடி தொடர்பாக வங்கியின் மேலாளர் மராத்தே, ஊழியர்களை மஹாராஷ்டிரா அரசு கைது செய்து இருக்கிறது.ஆனால், கடந்த 2016-ம் ஆண்டு, நவம்பர் 8-ம் தேதி கொண்டுவரப்பட்ட பணமதிப்புநீக்கத்தின் போது, 5 நாட்களில் அகமதாபாத் மாவட்ட கூட்டுறவு வங்கியில் ரூ.745 கோடிக்கு செல்லாத ரூபாய் நோட்டுகள் டெபாசிட் செய்யப்பட்டது. அந்த அகமதாபாத் மாவட்ட கூட்டுறவு வங்கியின் இயக்குநரான பாஜக தலைவர் அமித் ஷா மீது எந்தவிதமான நடவடிக்கையும், விசாரணையும் செய்யப்படாதது ஏன்.மஹாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர பட்நாவிஸ் ஒரு பொய்யர். மஹாராஷஷ்டிரா வங்கியின் மேலாளர் மராத்தா கைது செய்யப்பட்டது குறித்துகேட்டால், தனக்கு அது குறித்து தெரியாது என்று தெரிவிக்கிறார்.பேங்க் ஆப் பரோடா வங்கியுடன், பேங்க் ஆப் மஹாராஷ்டிரா வங்கியை இணைக்க ஏதோ சதி நடக்கிறது. வங்கி ஊழல் தொடர்பாக மேலாளர் மராத்தாவே கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டார் என்றால், ஐசிஐசிஐ வங்கியில் நடந்த முறைகேடு தொடர்பாக அதன் தலைவர் சந்தா கோச்சார் ஏன் கைது செய்யப்படவில்லை, பஞ்சாப் நேஷனல் வங்கியின் தலைவர், இயக்குநர்கள், அதிகாரிகள் ஏன் கைது செய்யப்படவில்லை.இவ்வாறு ராஜ்தாக்கரே தெரிவித்தார்