சென்னை பூந்தமல்லி அருகே ஆட்டோ ரேசில் ஈடுபட்டவர்களை, போலீசார் சினிமா பாணியில் துரத்தி பிடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.சென்னை வண்டலூர் – மீஞ்சூர் வெளிவட்ட சாலையில் மோட்டார் சைக்கிள்கள் மற்றும் ஆட்டோக்கள் அடிக்கடி ரேசில் ஈடுபடுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து ரேஸில் ஈடுபடுபவர்களைப் பிடிக்க, சாலைப் போக்குவரத்து போலீசார் தலைமையில் தனிப்படைகள் அமைக்கப்பட்டன. இந்நிலையில் உதவி ஆய்வாளர் சாம் சுந்தர், சரவணன் மற்றும் சாலமன் ஆகிய மூவர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தபோது, ஆட்டோவில் ரேஸ் சென்றவர்களை மடக்கினர். அப்போது கண்ணிமைக்கும் நேரத்தில் காவல்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் ரேஸில் ஈடுபட்டவர்கள் தப்பினர். ஆனால், இதைக்கண்டு அசராத சாலைப்போக்குவரத்து காவல்துறையினர் சுமார் 15 கிலோமீட்டர் தூரம் ஒரு மணிநேரம் சேஸிங்கில் பின் தொடர்ந்து சென்று, ரேஸில் ஈடுபட்டவர்களைக் கைது செய்தனர். அப்போது அவர்களிடமிருந்து 6 ஆட்டோ, ஒரு இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்த காவல்துறை, ரேஸில் ஈடுபட்ட 4 பேரைக்கைது செய்தனர்.