30 வயதுக்கு மேற்பட்ட காவலர்களுக்கு இலவச முழு உடல் பரிசோதனை மேற்கொள்ளப்படும் என்று முதலமைச்சர் தெரிவித்தார். ஓய்வு பெற்ற காவல் அதிகாரிகளுக்கு நலவாரியம் உருவாக்கப்படும் என்றும் அவர் கூறினார். தடய அறிவியல் துறையில் சிறந்து விளங்கும் 2 பேருக்கு இந்த ஆண்டு முதல் தமிழ்நாடு முதலமைச்சரின் விருது வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.தீயணைப்பு மற்றும் கட்டிட பராமரிப்புப் பணிக்காக கூடுதலாக 8 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்படும் என்று முதலமைச்சர் கூறினார். தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறைப் பணியாளர்களுக்கு நீள்பணி சிறப்பூதியம் திருத்தி வழங்கப்படும் என்றும் தெரிவித்தார்.6 கோடியே 25 லட்சம் ரூபாய் செலவில், காஞ்சிபுரம் மாவட்டம் மகேந்திரா வேர்ல்டு சிட்டி, திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறை, சேலம் மாவட்டம் கருமந்துறை, நங்கவள்ளி மற்றும் மதுரை மீனாட்சி அம்மன் கோவில் ஆகிய இடங்களில் புதிய தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் நிலையங்கள் அமைக்கப்படும் என்று அவர் கூறினார்.மதுரை மாவட்டம் கொட்டாம்பட்டி, தல்லாகுளம், திருவாரூர் தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் நிலையங்களுக்கும், சேலம் மாவட்டம் நங்கவள்ளியில் புதியதாக அமைக்கப்படவுள்ள தீயணைப்பு மற்றும் மீட்புபணிகள் நிலையத்திற்கும் மொத்தம் 7 கோடியே 39 லட்சம் ரூபாய் செலவில் புதிய கட்டிடங்கள் கட்டப்படும் என்பன உள்ளிட்ட 23 அறிவிப்புகளை முதலமைச்சர் வெளியிட்டார்.