- காவிரி விவகாரத்தை மீண்டும் சிக்கலாக்கும் முயற்சியில் கர்நாடக அரசு ஈடுபட்டுள்ள நிலையில் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உடனடியாக அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டுமாறு தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.ஜூலை 2-ல் காவிரி மேலாண்மை ஆணையத்தின் முதல் கூட்டம் நடைபெறவுள்ள நிலையில் உச்சநீதிமன்றத்தில் ஸ்கீம் பற்றி விளக்கம் கேட்போம் என்றும், நாடாளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும் என்றும் பழைய பல்லவியையே பாடி குறுக்குச்சால் ஓட்டும் கர்நாடக அரசின் திட்டத்திற்கு மத்திய பா.ஜ.க. அரசு எவ்விதத்திலும் துணைபோய்விடக்கூடாது என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இப்போது கிடைத்துள்ள குறைந்தபட்ச உரிமையையாவது நிலை நாட்ட அனைத்துக் கட்சிகளின் துணையுடன் போராடவும், தமிழக மக்களவை, மாநிலங்களவை உறுப்பினர்களுடன் பிரதமரை சந்தித்து உச்சநீதிமன்றத் தீர்ப்பை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கவும் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்