அரசின் மக்கள் நலத் திட்டங்களை ஏழை எளிய மக்களிடையே முறையாக கொண்டு சென்று சேர்த்து அரசுக்கும் மக்களுக்கும் பாலமாக விளங்கும் வருவாய்த் துறையின் மேம்பாட்டிற்காக, புதிய வருவாய் வட்டங்களை உருவாக்குதல், வருவாய்த்துறைக்கு அனைத்து வசதிகளுடன் கூடிய சொந்தக் கட்டடங்கள் கட்டுதல், அலுவலர்களுக்கு குடியிருப்புகள் கட்டுதல் போன்ற பல்வேறு திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது.
பெரம்பலூர் மாவட்டம் குன்னம் வட்டம், கீழப்புலியூர், வேப்பந்தட்டை வட்டத்திற்குப்பட்ட வெங்கலம், ஆலத்தூர் வட்டத்திற்குப்பட்ட கொளக்காநத்தம் உள்ளிட்ட மூன்று குறுவட்டங்களிலும் தலா ரூ.12 லட்சத்து 71 ஆயிரம் வீதம் மொத்தம் ரூ38.13 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள குறுவட்ட நில அளவருக்கான குடியிருப்புகளுடன் கூடிய அலுவலகக் கட்டடங்களை தமிழ்நாடு முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதா காணொலி காட்சி மூலம் இன்று தலைமைச் செயலகத்திலிருந்து திறந்து வைத்தார்.
திறப்பு விழாவுக்கு பின்னர் சம்மந்தப்பட்ட பகுதிகளின் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், வட்டாட்சியர்கள் உள்ளிட்ட அலுவலர்கள் பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினர்.