சிறையில் அடைக்கப்பட்டுள்ள பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீஃபிற்கு திடீரென உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளது. சிறையில் தண்டனை அனுபவித்து வரும் நவாஸ் ஷெரீஃப், கடந்த சில நாட்களாகவே தமது உடல்நலம் பாதிக்கப்பட்டிருப்பதாக தெரிவித்து வந்தார். இதையடுத்து, அவரை பரிசோதித்த மருத்துவர், நவாஸுக்கு ரத்தக்கொதிப்பு அதிகமாக இருப்பதாகவும், இதயத்துடிப்பு சீரற்ற நிலையில் செயல்படுவதாகவும், வியர்வை அதிகமாக வெளியேறி நீர்சத்து குறைவாக காணப்படுவதாகவும் தெரிவித்தார். அவரின் சிறுநீரகம் செயலிழக்கும் நிலையில் உள்ளதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், நவாஸை உடனடியாக மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளிக்க வேண்டும் என்றும் சிறை அதிகாரிகளிடம் மருத்துவர் அறிவுறுத்தினார். ஆனால், பாதுகாப்பு நடவடிக்கை காரணமாக நவாஸை மருத்துவமனையில் அனுமதிப்பதற்கு அதிகாரிகள் தயக்கம் காட்டி வருகின்றனர். நவாஸை மருத்துவமனையில் சேர்ப்பது குறித்து பாகிஸ்தான் அரசு விரைவில் முடிவெடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.