தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு தொடர்பாக ஏன் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடக் கூடாது என கேள்வி எழுப்பியுள்ள உயர்நீதிமன்றம், துப்பாக்கிச் சூடு தொடர்பான வீடியோ மற்றும் புகைப்பட ஆதாரங்களை தாக்கல் செய்யுமாறு தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரணை, சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணை, நிவாரண உதவியை உயர்த்தி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளுடன் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்கள் தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி ஆஷா அமர்வு முன்பு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, ஒன்றரை மாதங்களாகிவிட்டபோதும், தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பான காவல்துறை விசாரணை திருப்தி அளிக்கவில்லை என மனுதாரர் தரப்பில் புகார் அளிக்கப்பட்டது. எனவே சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்றும் மனுதாரர் தரப்பில் வலியுறுத்தப்பட்டது. அப்போது, சிபிசிஐடி விசாரணை சரியான திசையில் சென்று கொண்டிருப்பதால், சிபிஐ விசாரணை தேவையில்லை என்று தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயணன் வாதிட்டார். ஆனால், பிரேதப் பரிசோதனை அறிக்கைகள் கூட தங்களுக்கு கிடைக்கவில்லை என மனுதாரர் தரப்பில் கூறப்பட்டபோது, சம்மந்தப்பட்ட மாஜிஸ்திரேட்டை அணுகி பெற்றுக் கொள்ளலாம் என விஜய் நாராயணன் தெரிவித்தார்.போலீஸ் வாகனங்கள் தீ வைத்து எரிக்கப்பட்டதை தொலைக்காட்சியில் காட்டப்பட்டதை தாம் பார்த்ததாக தலைமை நீதிபதி அமர்வு குறிப்பிட்டது. தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்திற்கு காரணமானவர்கள் யாராக இருந்தாலும் தண்டிக்கப்பட வேண்டும், அப்போதுதான் மக்களுக்கு நம்பிக்கை ஏற்படும் எனவும் நீதிபதிகள் கருத்துத் தெரிவித்தனர். குட்கா வழக்கில் அமைச்சர், அதிகாரிகளுக்கு எதிராக குற்றச்சாட்டு எழுந்தபோது, சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டதை சுட்டிக்காட்டிய தலைமை நீதிபதி அமர்வு, இந்த வழக்கிலும் காவல்துறையினர் மீது மனுதாரர்கள் குற்றச்சாட்டு எழுப்புவதை சுட்டிக்காட்டியது. எனவே, தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு தொடர்பாக ஏன் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடக் கூடாது எனவும் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். சிபிசிஐடி விசாரணை சரியான திசையில் சென்று கொண்டிருக்கும் நிலையில், தங்களிடம் உள்ள புகைப்பட, வீடியோ ஆதாரங்களை நீதிமன்றத்தில் சமர்ப்பிப்பதாக தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயணன் கூறினார்.அதைப் பார்த்தால் சிபிஐ விசாரணை தேவையில்லை என்ற முடிவுக்கு நீதிமன்றமே வரும் எனவும் அவர் வாதிட்டார். இதையடுத்து, புகைப்படம் மற்றும் வீடியோ ஆதாரங்களை 3 வாரங்களில் தாக்கல் செய்ய உத்தரவிட்ட தலைமை நீதிபதி அமர்வு, வரும் 30ஆம் தேதிக்கு வழக்கு விசாரணையை ஒத்திவைத்தது.