தூத்துக்குடியில் நடைபெற்ற காவல்துறை துப்பாக்கி சூடு கண்டித்து சென்னையில் திருநங்கைகள் கூட்டமைப்பினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் 200-க்கும் மேற்பட்ட திருநங்கைகள் பங்கேற்றனர்.திருவள்ளூர் மாவட்ட திருநங்கைகள் கூட்டமைப்பு தலைவர் விம்கோ சுந்தரி, காஞ்சிபுரம் மாவட்ட தலைவர் கிருபா, சென்னை மாவட்ட தலைவர் நீலாம்மா ஆகியோர் போராட்டத்துக்குக தலை வகித்தனர்.செய்தியாளர்களிடம் பேசிய அவர்கள், தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலை வந்த பின்னர் பெற்ற குழந்தைகளுக்கு பால் கூட கொடுக்க முடியாமல் தாய்மார்கள் தவிக்கும் நிலை ஏறபட்டுள்ளது என குற்றம் சாட்டினர். காற்று மற்றும் சுற்றுப்புற மாசு காரணமாக அங்கு வசிப்பவர்களின் உடலில் பல்வேறு யோய் கிருமிகள் உருவாவதாகவும் இதனால் உயிர்பலிகள் அதிகரிப்பதாகவும் குற்றம்சாட்டினர். இந்த நிலையை மாற்ற தமிழக அரசு முன்வராமல் உரிமைகளுக்காக போராடும் மக்களை சுட்டு பொசுக்குவது எந்த வகையில் நியாயம் என கேள்வி எழுப்பினர்.துப்பாக்கி சூட்டில் இறந்த அனைவருமே தங்களின் சொந்தங்கள் என்றும் அவர்களுக்கு ஏற்பட்ட பாதிப்பு தங்களுக்கு பெரும் மனவலியை கொடுத்து இருப்பதாகவும் கூறினர். மத்திய மாநில அரசுகள் உடனடியாக ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதுடன் துப்பாக்கி சூடுநடத்திய காவல் அதிகாரியை பணி நீக்கம் செய்து அவரை தண்டிக்க வேண்டும் என்றும் கூறினர்.வந்தாரை வாழவைக்கும் தமிழகத்தில் உரிமைக்காக போராடுபவர்களை காவல்துறையை வைத்து அரசே வேட்டையாடுவது முறையா என்றும் வினா எழுப்பினர். பின்னர் சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகே ஒப்பாரி வைத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது காவலுதுறையினருடன் திருநங்கைகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது. இந்த ஆர்ப்பாடத்தில் பொறியாளர் கிரேஸ் பானு, டெல்பினா, ஸ்ரீஜித், மற்றும் சுதா உள்ளிட்ட திருநங்கைகளின் முன்னணி ஒருங்கிணைப்பாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.