நாட்டிலேயே பெண்களுக்கு பாதுகாப்பு உள்ள முதல் மாநிலம் தமிழகம்தான் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.காவல்துறை மற்றும் தீயணைப்புத்துறை மானியக் கோரிக்கையின் போது உறுப்பினர்கள் நேற்று எழுப்பிய கேள்விக்கு முதலமைச்சர் இன்று பதில் அளித்தார். தமிழகத்தில் பொது ஒழுங்கை பராமரிப்பதில் காவல்துறையினர் சிறப்பாக செயல்பட்டு வருவதாக அவர் தெரிவித்தார்.பிற மாநிலங்களோடு ஒப்பிடும்போது தமிழகத்தில் குற்றங்களின் விகிதம் குறைவாக உள்ளதாகக் கூறிய அவர், குற்றவாளிகளை கண்டுபிடிப்பதிலும், நீதிமன்றத்தில் நிறுத்துவதிலும் காவல்துறையினர் சிறப்பாக செயல்படுவதாகக் கூறினார். குற்றவழக்குகளில் குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத் தரும் விகிதமும் அதிகரித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.பெண்களுக்கு எதிரான குற்றங்களின் விகிதம் மற்ற மாநிலங்களை விட தமிழகத்தில் மிகக் குறைவாக உள்ளதாக தேசிய குற்ற ஆவண புள்ளிவிவரம் மூலம் தெரியவருவதாகவும் முதலமைச்சர் கூறினார்.தொடர் கண்காணிப்புகள் மூலம் ஐ.எஸ்.ஐ.எஸ். இயக்கத்தின் ஊடுருவல் தமிழகத்தில் தடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். மூளைச்சலைவை மூலம் ஐ.எஸ்.ஐ.எஸ். இயக்கத்தில் தமிழக இளைஞர்கள் இணைவது தடுக்கப்பட்டுள்ளதாகவும் முதலமைச்சர் கூறினார்.