தெலுங்கானாவில் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட திடீர் தீவிபத்தில் சிக்கி 11 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.வாரங்கல் மாவட்டம் கோட்டிலிங்கலா கிராமத்தில் உள்ள பத்ரகாளியம்மன் பட்டாசு ஆலையில் வழக்கம் போல் ஊழியர்கள் இன்று பணியில் இருந்தனர். அப்போது, வெடி பொருட்களில் உராய்வின் காரணமாக பற்றிய தீ, மளமளவென அடுத்தடுத்த பகுதிகளுக்கு பரவியது. கரும்புகையுடன் பரவிய தீயில் சிக்கி பட்டாசு தொழிலாளர்கள் 11 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். படுகாயங்களுடன் ஆபத்தான நிலையில் மீட்கப்பட்ட 15 –க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளனர். தகவலறிந்து வந்த தீயணைப்பு வீரர்கள், தீயை கட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர். சம்பவ இடத்திற்கு விரைந்த மாவட்ட ஆட்சியர், தீப்பிடித்து பட்டாசு ஆலையை பார்வையிட்டு, விபத்துக்குறித்து விசாரித்து வருகிறார். இந்தச் சம்பவம் அந்தப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.