பெரம்பலூர்: பெரம்பலூரில் மாநில அளவிலான அறிவியல் கண்காட்சி நடைபெறுவதை முன்னிட்டு மேற்கொள்ள வேண்டியபணிகள் குறித்து மாவட்ட ஆட்சியர் டாக்டர் தரேஸ்அஹமது தலைமையில் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.
அப்போது மாவட்ட ஆட்சியர் தெரிவித்ததாவது:
பெரம்பலூர் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் வருகின்ற டிசம்பர் 1,2 மற்றும் 3 ஆகிய தேதிகளில் மாநில அளவிலான அறிவியல் கண்காட்சி நடைபெற உள்ளது, நமது பெரம்பலூர் மாவட்டத்திற்கு மிகவும் பெருமை சேர்ப்பதாகும். மேலும் இந்த நிகழ்ச்சியை சிறப்பாக நடத்திட அனைத்து அலுவலர்களும் முழு ஒத்துழைப்பு நல்கிட வேண்டும். மேலும், இவ்விழாவினை சிறப்பாக நடத்திட ஏதுவாக பல்வேறு வகையான குழுக்ககள் அமைக்கப்பட்டுள்ளன, எனவே அலுவலர்கள் அனைவரும் தங்களுக்குண்டான பணியை பிறத்துறையை சேர்ந்த அலுவலர்களுடன் கலந்தாலோசித்து சிறப்பாக செய்து நமது மாவட்டத்திற்கு பெருமை சேர்த்திட வேண்டும்.
இவ்விழாவில், தமிழகம் முழுவதிலிருந்தும் 32 மாவட்டங்களை சேர்ந்த பல்வேறு பள்ளிகளை சேர்ந்த மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு, அவர்களின் அறிவியல் கண்டுப்பிடிப்புகளை காட்சிப்படுத்த உள்ளனர். எனவே விழாவிற்கு வருகை தர உள்ள அலுவலர்கள் மற்றும் மாணவ, மாணவிகளுக்கு தேவையான தங்கும் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும். விழா நடைபெறும் மேடை மற்றும் அரங்குகளை சிறப்பாகவும், பொதுமக்களை கவரும் வகையில் அமைத்திட வேண்டும்.
என்றும் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சிக்கு முன்பாக செஞ்சேரியில், அனைத்து பள்ளிகளை சேர்ந்த தலைமை ஆசிரியர்களுடனான ஆலோசனைக்கூட்டம் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாநில அளவிலான அறிவியல் கண்காட்சியை சிறப்பாக நடத்துவது குறித்து விவாதிக்ப்பட்டது.
மேற்கண்ட நிகழ்ச்சிகளில் முதன்மை கல்வி அலுவலர் முனுசாமி, முதன்மை கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் பிரேம்குமார் உள்ளிட்ட அலுவலர்கள் கலந்து கொண்டனர்.