பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை வட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள வனப்பகுதியில் மான்கள் கூட்டம் கூட்டமாக வசித்து வருகிறது. மழை காலங்களில் இந்த மான்கள் வனப்பகுதியிலுள்ள புற்களை மேய்ந்து அங்குள்ள நீர்நிலைகளில் தண்ணீரை குடித்து விட்டு வனத்தைவிட்டு வெளியே வராமல் இருக்கும்.
தற்போது, வனப்பகுதியில் உள்ள குட்டைகளில் நீர் வற்றி வறண்டு காணப்படுவதால் மான்கள் தண்ணீர் தேடி வனப்பகுதியை விட்டு அவ்வப்போது வெளியே வரும்.
அவ்வாறு இன்று, மேட்டுப்பாளையம் வனப்பகுதியை விட்டு வெளியே வந்த 2 வயது மதிக்கத்தக்க ஆண் புள்ளிமான் ஒன்று வாலிகண்டபுரம் வாலீஸ்வரர் கோவில் அருகே வந்துள்ளது.
அப்போது அந்த பகுதியில் சுற்றி திரிந்த தெருநாய்கள் மானைத் துரத்தியது. அப்போது கோவில் வளாகத்தின் கம்பிவேலியில் சிக்கிய மான் படுகாயமடைந்த நிலையில் தவித்துள்ளது.
அப்போது அங்கிருந்த பொதுமக்கள் மானை உயிருடன் மீட்டு வனக்காப்பாளர் ஆனையப்பனிடம் ஒப்படைத்தனர். பின்னர் கால்நடை மருத்துவரைக்கொண்டு மானுக்கு தீவிர சிகிச்சையளித்து வருகின்றனர்.