பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் வட்டம் நாரணமங்கலம் அருகே மருதடி கிராமத்தில் உள்ள மலையடிவார பகுதியில் சுமார் 15 ஏக்கர் நிலப்பரப்பில் கோரைப்புற்களால் வேயப்பட்ட சொகுசு குடில் பகுதிக்கு சிறுவர்கள் விளையாடுவதற்காக சென்றுள்ளனர்.
இதனையறிந்த குடில் உரிமையாளர்கள் அந்த சிறுவர்களை இங்கு வரக்கூடாது என அடித்து விரட்டியுள்ளனர். சிறுவர்கள் இச்சம்பவம் குறித்து தங்கள் பெற்றோர்களிடம் தெரிவித்துள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த சிறுவர்களின் பெற்றோர் சம்பவ இடத்திற்கு சென்று தட்டி கேட்ட போது அவர்களையும் குடிலில் இருந்த இளைஞர்கள் தாக்க முயன்றுள்ளனர்.
இதனால் சம்பவ இடத்தில் திரண்ட அப்பகுதியை சேர்ந்த கிரா மக்கள் 200க்கும் மேற்ப்பட்டோர் தாக்குதலில் ஈடுபட்டவர்களை குடிலில் புகுந்து தாக்கிட முயற்சித்த போது குடில் சுவரில் ஏராளமான சாமி மற்றும் சித்தர்கள் புகைப்படங்கள் மாட்டப்பட்டிருந்ததும், ஒரு அறையில் பிரமாண்டமான காளி சிலை வைக்கப்பட்டு அதன் முன் மண்டை ஓடு உள்ளிட்ட மனித உடல் உறுப்புகள், இரத்தம் மற்றும் பன்றி உள்ளிட்ட சில விலங்குகளின் தலை தாயத்து, மந்திர செப்பு தகடு ஆகியவற்றை வைத்து மாந்திரீக பூஜைகள் மற்றும் பயிற்சி அளித்து வருவதும் தெரிய வந்துள்ளது.
இதனால் அதிர்ச்சியில் உறைந்த பொது மக்கள் சந்தேகமடைந்து போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.
தகவலறிந்த ஏ.டி.எஸ்பி.,ஞானசிவக்குமார் தலைமையில் சம்பவ இடத்திற்கு சென்ற பாடாலூர் போலீஸார் குடிலுக்குள் சென்று ஆய்வு செய்ததில், பெரம்பலூர் கல்யாண் நகரைச்சேர்ந்த சேகர் மகன் கார்த்திக் (32), பாரதி நகர் பகுதியைச் சேர்ந்த சேட் மகன் சித்திக் (34), வடக்குமாதவி சாலையைச் சேர்ந்த ஷாஜகான் மகன் சலீம் (28), எளம்பலூர் சாலையைச்சேர்ந்த அஹமதுபாஷா மகன் சாதிக் (27),சேலத்தை சேர்ந்த தெய்வமணி மகன் ராம்குமார் (28) ஆகிய 6 பேரும் மாந்தீரீக வேலைகளில் ஈடுபட்டது தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து மந்திரவாதி கார்த்திக் உட்பட ஆறு பேரையும் பாடாலூர் போலீஸார் கைது செய்து, வருவாய்த்துறை மூலம் குடிலை பூட்டி சீல் வைத்தனர்.
மேலும் குடிலுக்குள் இருந்த கம்ப்யூட்டர் மற்றும் ஆபாச சி.டி.க்கள்.,சிடி ரைட்டர்கள் இளம் பெண்களின் புகைப்படங்கள் ஆகியவற்றை கைப்பற்றிய போலீசார் மாந்திரீகம் என்ற பெயரில் குடிலில் நரபலிகள் ஏதும் கொடுக்கப்பட்டிருக்கிதா என்ற கோணத்திலும், வி.ஏ.ஓ.,ஜீவானந்தம் அளித்த புகாரின் பேரில் தொடர் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.
மூலிகை செடி வளர்ப்பதாக கூறிய இடத்தில் இளைஞர்கள் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.