Perambalur: Siruvachur Madhurakaliamman Temple Chithirai Therottam: A large number of devotees participated!
சிறுவாச்சூர் மதுரகாளியம்மன் கோயில் சித்திரை தேரோட்டம் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு பக்தி பரவசத்துடன் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
பெரம்பலூர் அருகேயுள்ள சிறுவாச்சூர் மதுரகாளியம்மன் கோயிலில் சித்திரை தேரோட்டம் இன்று வெகு விமர்சையாக நடைபெற்றது. இந்தக் கோயிலின் சித்திரைத் திருவிழாவையொட்டி கடந்த ஏப்ரல் 29 ஆம் தேதி நடைபெற்ற பூச்சொறிதல் விழாவில், பெரம்பலூர், பாடாலூர், அரும்பாவூர், மருவத்தூர் உள்பட பல்வேறு பகுதிகளிலிருந்து அலங்கரிக்கப்பட்ட வாகனங்களில் பூக்கள் எடுத்துச் செல்லப்பட்டு, மதுரகாளியம்மனுக்கு பூக்களால் அபிஷேகம் செய்யப்பட்டது.
இதைத்தொடர்ந்து, மே.6ஆம் தேதி பெரியசாமி மலையில் செல்லியம்மனுக்கும், மதுரகாளியம்மனுக்கு காப்பு கட்டுதல் நிகழ்ச்சியும், தொடர்ந்து, நாள்தோறும் இரவு யானை, குதிரை உள்ளிட்ட அலங்கரிக்கப்பட்ட வாகனங்களில் புதன்கிழமை இரவு வரை அம்மன் திருவீதி உலா நிகழ்ச்சிகளும் நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்வான திருத்தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சி, இன்று காலை நடைபெற்றது. மதுர காளியம்மன் தேரில் வீற்றிருக்க பக்தர்கள் பக்தி பரவசத்துடன் தேரை வடம்பிடித்து இழுத்தனர். சிறுவாச்சூர் கிராமத்தின் பிரதான வீதிகள் வழியே இழுத்துச் செல்லப்பட்ட தேர் மாலையில் நிலைக்கு வந்தடைந்தது.
தொடர்ந்து, வெள்ளிக்கிழமை (மே 16) உற்சவ அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகமும், ஊஞ்சல் நிகழ்ச்சியும், மே.17 ஆம் தேதி அம்பாள் மற்றும் பரிவார தெய்வங்களுடன் திருவீதி உலாவும், மே.19ஆம் தேதி மூலஸ்தான சிறப்பு வழிபாடு மற்றும் சுவாமி மலை ஏறுதல் நிகழ்ச்சியுடன் விழா நிறைவடைகிறது. இதில், பெரம்பலூர், அரியலூர், துறையூர், திருச்சி, கடலூர், நாமக்கல், சென்னை, கடலூர் உள்பட பல்வேறு நகரங்களிலிருந்து திரளான பொதுமக்கள் கலந்துகொண்டனர்