பெரம்பலூரில் அதிமுக பிரமுகர்கள் வீட்டில் பணம் இருப்பதாக வந்த தகவலையடுத்து தேர்தல் பறக்கும் படையினர் தீடீரென சோதனையில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
பெரம்பலூர் புதிய மற்றும் பழைய பேருந்து நிலையம் பகுதியிலுள்ள வேப்பந்தட்டை ஒன்றிய செயலாளர் சிவப்பிரகாசம், முத்துசாமி மற்றும் குன்னம் கிராமத்திலுள்ள அம்மா பேரவையின் மாவட்ட இணைச்செயலாளர் குணசீலன் ஆகியோரது வீடுகளில் வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்வதற்காக பணம் பதுக்கி வைத்திருப்பதாக பெரம்பலூர் சட்டமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலரும் ஆர்டிஓ., பேபிக்கு புகார் வந்தது.
இதனையடுத்து ஆர்டிஓ உத்தரவின் பேரில் பெரம்பலூர் தாசில்தார் சிவா தலைமையிலான பறக்கும் படையினர் சிவப்பிரகாசம்,முத்துசாமி ஆகியோரது வீடுகளிலும், செந்துறை தேர்தல் பறக்கும் படையினர் குன்னம் கிராமத்தில் குணசீலனின் ஜெராக்ஸ் கடையிலும் திடீர் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.
அதிகாரிகளின் இந்த திடீர் சோதனையில் பணம் உள்ளிட்ட பரிசு பொருட்கள் எதுவும் கிடைக்கவில்லை. அதிமுக பிரமுகர்களின் வீட்டில்அடுத்தடுத்து நிகழ்ந்த திடீர் சோதனையால் பெரும்பரப்பு ஏற்பட்டது.