பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் க.நந்தக்குமார் தெரிவித்துள்ளாதவது:
தமிழ்நாட்டில் உள்ள அரசு, அரசு உதவி பெறும் மற்றும் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் 1-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை பயிலும் கிறித்துவா; இஸ்லாமியர், புத்த மதத்தினர், சீக்கியர், மற்றும் பார்சி வகுப்பைச் சேர்ந்த சிறுபான்மையின மாணவ – மாணவியர்களுக்கு பள்ளிப் படிப்பு கல்வி உதவித்தொகை (Prematric Scholarship) திட்டத்தின் கீழ் 2016-2017-ஆம் ஆண்டிற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பங்களை ஆன்லைனில் மட்டுமே பூர்த்தி செய்து அனுப்ப வேண்டும்.
இத்திட்டத்தின் கீழ் கல்வி உதவித்தொகை பெற மாணவ – மாணவியரின் பெற்றோர் (அ) பாதுகாவலரது ஆண்டு வருமானம் ரூ.1.00 இலட்சத்திற்கு மிகாமல் இருத்தல் வேண்டும். மாணவ – மாணவியர் முந்தைய ஆண்டின் இறுதித் தேர்வில் (ஒன்றாம் வகுப்பு நீங்கலாக) 50 விழுக்காடு மதிப்பெண்களுக்கு குறையாமல் பெற்று தேர்ச்சி பெற்றிருத்தல் வேண்டும். பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை, ஆதிதிராவிடர் நலத்துறை, மற்றும் இதர துறைகள், நலவாரியங்கள் மூலம் கல்வி உதவித்தொகை பெறுதல் கூடாது.
ஆதார் எண் கண்டிப்பாக குறிப்பிட வேண்டும். 1 முதல் 10-ஆம் வகுப்பு மாணவ – மாணவிகள் புதியது (ம) புதுப்பித்தல் கல்வி உதவித்தொகை விண்ணப்பங்களை www.scholarships.gov.in , என்ற இணையதள முகவரியில் ஆன்லைனில் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிக்கும் போது இணைக்க வேண்டிய ஆவணங்களை ஸ்கேன் செய்து அப்லோடு செய்திட வேண்டும். விண்ணப்பித்த பின் விண்ணப்பத்தை படியிறக்கம் செய்து கல்வி நிலையத்தில் 31.08.2016-க்குள் சமர்ப்பிக்க வேண்டும்.
கல்வி நிலையங்கள் மாணவ – மாணவியர்களிடமிருந்து பெற்ற விண்ணப்பங்களைச் சரிபார்த்து ஆன்லைன் மூலம் 31.08.2016-க்குள் பார்வேர்டு செய்ய வேண்டும். மேலும் தகுதியுள்ள மாணவ, மாணவியரின் பெயர் பட்டியலை உரிய ஒப்பம் இட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலருக்கு அளிக்க வேண்டும்.
சிறுபான்மையின மாணவ, மாணவியர்கள் மேற்படி கல்வி உதவித்தொகை பெற உரிய காலத்தில் விண்ணப்பித்து பயனடையுமாறு தெரிவித்துள்ளார்.