பெரம்பலூரில் பொங்கல் பண்டிகை களை கட்டியுள்ளது. பொங்கல் பொருட்கள் வாங்குவதற்காக மார்க்கெட், கடைவீதிகளில் மக்கள் குவிந்துள்ளனர்.
தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை நாளை மறுநாள் (15ம்தேதி) கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி கடந்த 3 நாட்களாக பெரம்பலூரில் காய்கறி விலை கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. பெரம்பலூர் மார்க்கெட்டுகளில் காய்கறி, வாழைத்தார், மஞ்சள் கொத்து, கரும்பு, பனங்கிழங்கு உள்ளிட்ட பொங்கலுக்கு தேவையான பொருட்களின் விற்பனை அதிகரித்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.
மார்க்கெட்டில் பரங்கிக் காய், பூசணிக்காய், கத்திரிக்காய், வெண்டைக்காய், அவரைக்காய், தக்காளி, மிளகாய், பட்டர் பீன்ஸ், முட்டைகோஸ், வெங்காயம், தடியங்காய், உருளைக்கிழங்கு, சேனைக்கிழங்கு, சிறுகிழங்கு, தேங்காய் உட்பட பல்வேறு காய்கள் விற்பனைக்கு குவிந்துள்ளன. மேலும், வாழைத்தார், கரும்பு, பனங்கிழங்கும், பச்சரிசி, சம்பா அரிசி, வெல்லம் போன்றவைகளும் விற்பனையும் அதிகரித்துள்ளது. இதுபோல் பூ மார்க்கெட்டிலும் மக்கள் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது. மார்க்கெட் விலையை விட உழவர் சந்தையில் காய்கறி கடையில் விலை குறைவாக இருப்பதாக மக்கள் தெரிவித்தனர்.
பொங்கல் பண்டிகையையொட்டி பொங்கல் சீர் கொடுப்பதற்காக லாரி, வேன், ஆட்டோக்களில் கரும்பு, அரிசி, வெண்கல பாத்திரங்கள் உள்ளிட்ட சீர்வரிசை பொருட்களுடன் மக்கள் சென்ற வண்ணம் உள்ளனர்.