மதுரையில் பேட்ஜ் உரிமம் வழங்கியதில் 10 கோடி ரூபாய் அளவுக்கு லஞ்சம் பெற்றதாக வட்டார போக்குவரத்து அதிகாரிகள் உள்பட 17 பேர் மீது லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மதுரை மாவட்டத்தில் மதுரை வடக்கு, மதுரை மத்தி, மதுரை தெற்கு என 7 வட்டார போக்குவரத்து அலுவலகம் இயங்கி வருகிறது. இதில் மதுரை வடக்கு வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் 2015 மற்றும் 2016ஆம் ஆண்டில் பணம் வாங்கிக் கொண்டு ஏராளமானோருக்கு வாடகை வாகனங்கள் ஓட்டுவதற்கான பேட்ஜ் உரிமங்கள் வழங்கப்பட்டுள்ளதாக மாவட்ட லஞ்ச ஒழிப்பு காவல்துறையிடம் புகார் அளிக்கப்பட்டது.இதை அடுத்து விசாரணை மேற்கொண்ட லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர், தணிக்கையிலும் ஈடுபட்டனர். அப்போது வடக்கு வட்டார போக்கு வரத்து அலுவலகத்தில் போலியான பள்ளி மாற்று சான்றிதழ் மற்றும் மதிப்பெண் சான்றிதழ்களை பெற்றுக் கொண்டு 6 ஆயிரத்து 777 பேருக்கு பேட்ஜ் வழங்கப்பட்டு உள்ளதாகவும், இதற்காக ஒவ்வொருவரிடமும் 15 ஆயிரம் முதல் 20 ஆயிரம் ரூபாய் வரை என 10 கோடியே 16 இலட்சத்து 55 ஆயிரம் ரூபாய் லஞ்சம் பெற்று உள்ளது தெரிய வந்தது.இதுதொடர்பாக அப்போதைய மதுரை வடக்கு போக்குவரத்து அலுவலர் கல்யாண்குமார் உள்ளிட்ட 6 வட்டார போக்குவரத்து அதிகாரிகள் மற்றும் 11 ஓட்டுனர் பயிற்சி பள்ளி நிர்வாகிகள் என மொத்தமாக 17 பேர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.