உ.பி.மாநிலம் லக்னோவைச் சேர்ந்த முகமது அனஸ் சித்திக் இந்து மதத்தைச் சேர்ந்த தன்வி சேத் என்பவரும் திருமணம் செய்து கொண்டு தம்பதிகளாக வாழ்ந்து வருகின்றனர், இவர்களுக்கு 6 வயதில் மகளும் இருக்கிறார்.இந்நிலையில் இவர்கள் லக்னோவில் உள்ள பாஸ்போர்ட் அலுவலகத்தில் விண்ணப்பித்தனர், ஆனால் முஸ்லிம் மதத்தைச் சேர்ந்தவரைத் திருமணம் செய்துகொண்டதால் பாஸ்போர்ட்டில் சிக்கல் என்று தன்வியிடம் பாஸ்போர்ட் அதிகாரி தெரிவித்துள்ளார். மேலும் பாஸ்போர்ட் அதிகாரி விகாஸ் மிஸ்ரா கடுமையாக அவரை ஏசியதாகவும் பரபரப்பானது.இது குறித்து தன்வி, “என்னுடைய பெயரை மட்டுமே வைத்துள்ளார் கணவர் பெயரைசசேர்க்கவில்லை. எல்லோர் முன்னிலையிலும் என்னை அவமானப்படுத்தினார் விகாஸ் மிஸ்ரா, முஸ்லிமைத் திருமணம் செய்து கொண்டதற்காக அவர் எல்லோர் முன்னிலையிலும் என்னை அவமானப்படுத்தினார். ஆவணங்கள் சரியாக இருந்த போதிலும் கிடப்பில் போடப்பட்டன” என்று அவர் பதிவிட இது சமூக வலைத்தளங்களில் வைரலானது.
அதாவது பாஸ்போர்ட் புதுப்பிக்கப்பட வேண்டுமென்றால் இந்து மதத்திற்கு மாற வேண்டுமென்று அதிகாரி விகாஸ் தன் கணவரிடம் கூறியதாகவும் அவர் பதிவிட்டார். தன்னுடைய ட்விட்டர் ஆதங்கத்தை வெளியுறவு அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் பார்வைக்கும் கொண்டு செல்ல அவர் இவர்களுக்கு பாஸ்போர்ட் வழங்க் உத்தரவிட்டதோடு, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டார்.இந்நிலையில் விகாஸ் மிஸ்ரா செய்தியாளர்கள் சந்திப்பில் விளக்கம் அளிக்கும் போது, “தன்வியிடம் அவர் பெயரை அவரது முஸ்லிம் திருமண ஒப்பந்தத்தில் உள்ள பெயரான ஷாதியா அனாஸ் என்று மாற்றிக் கொள்ளுமாறு கூறினேன். ஆனால் மாற்ற மாட்டேன் என்றார் அவர். தவறான பெயரில் யாரும் பாஸ்போர்ட் வாங்கிச் செல்லக்கூடாது என்பதை உறுதி செய்யவே நாங்கள் அவ்வாறு கூறினோம்” என்றார் உடனே வலதுசாரி ட்விட்டர்வாசிகளுக்கு வந்ததே கோபம் சுஷ்மா ஸ்வராஜ் மீது. உண்மை என்னவெனில் நடப்பு பாஸ்போர்ட் விதிகளில் பெண்களின் திருமணச் சான்றிதழை பெயருக்கான ஆதாரமாக எடுத்துக் கொள்ள வேண்டிய அவசியமே இல்லை என்பதுதான்.
சுஷ்மா ஸ்வராஜ் ஏதோ இதன் மூலம் சிறுபான்மையினருக்கு சார்பாக செயல்பட்டுவிட்டதாகக் கடுமையாக கேலி பேசி, ஏசியும் வலது சாரிகள் ட்விட்டரில் சாடத் தொடங்கினர்.ஜெய்.. சஃப்ரான் ராக்ஸ் என்ற ட்விட்டர் ஹேண்டிலில், சுஷ்மா ஸ்வராஜ் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். உண்மையை அறியாமல் சிறுபான்மையினருக்கு ஆதரவளிக்கிறார். நேர்மையான அதிகாரிக்கு விசாரணை துரோகிகளுக்கு ஆதரவா? என்று ட்வீட் செய்துள்ளார்.மேலும் நிறைய வலதுசாரிகள் “ஷேம் ஆன் சுஷ்மா ஸ்வராஜ்” என்று பதிவிட்டுள்ளனர். மேலும் சிலர் அவதூறாகவும் சுஷ்மாவை ஏகடியம் பேசியுள்ளனர்.வசைகளை அலட்டிக் கொள்ளாமல் கையாண்ட சுஷ்மா:நிறைய வசைமாரி பொழிந்ததை சுஷ்மா ஸ்வராஜ் ஒருவார காலம் அயல்நாட்டுக்குச் சென்று விட்டு திரும்பியபோது பார்த்துள்ளார். அத்தனை வசைமாரிகளையும் ‘லைக்’ செய்து பதிலடி கொடுத்தார் சுஷ்மா.
மேலும் தன் மேல் பாயும் விஷ நாக்குகளை உலகம் அறியட்டும் என்று பல வசைகளை மறு ட்வீட்டும் செய்துள்ளார்.இந்த வசைகள் குறித்து அவர் தன் ட்விட்டர் பக்கத்தில், “ நான் 17 முதல் 23 வரை இந்தியாவில் இல்லை. நான் இல்லாத நேரத்தில் என்ன நடந்தது என்று தெரியவில்லை. ஆனாலும் சில ட்வீட்கள் என்னை கவுரவித்துள்ளன அதனை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். ஆகவே அவற்றை நான் லைக் செய்கிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.வலதுசாரிகளின் விஷவிரல்களுக்கும் நாக்குகளுக்கும் சுஷ்மா மட்டும் இலக்காகவில்லை, மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், ‘அனைத்து காஷ்மீரிகளும் தீவிரவாதிகள் அல்ல’ என்று கூறியதற்கும் அவரை கடுமையாகச் சாடினர்.