பலத்த மழையின்போது வெள்ளத்தில் சிக்கிய மாணவர்களை மீட்ட பள்ளி பேருந்து ஓட்டுநர் அதே வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்த சம்பவம் பேரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.தென் மேற்கு பருவமழை தொடங்கியது முதலே மகாராஷ்ராவில் கனமழை பெய்து வருகிறது. கடந்த சில தினங்களாக மும்பை, பால்கர் உள்ளிட்ட நகரங்களில் மழை வெளுத்து வாங்குகிறது. அங்கு நேற்று காலை மழை சற்று ஓய்ந்த நிலையில் பள்ளிகள் வழக்கம்போல் இயங்கின.ஆனால் பிற்பகலுக்கு பின் பலத்த மழை பெய்தது. இதனால் சாலைகளில் மழை நீர் தேங்கி வெள்ளமாக காட்சியளித்தது. வெள்ளத்தில் வாகனங்கள் செல்ல முடியாமல் சிக்கின. பள்ளி முடிந்து குழுந்தைகள் பள்ளி பேருந்துகளில் வழக்கம்போல் வீடு திரும்பினர்.
பால்கர் நகரில் பள்ளி குழந்தைகளை ஏற்றிக் கொண்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த பேருந்து கடும் மழை வெள்ளத்தில் சிக்கியது. பிரகாஷ் பாலு பாட்டீல் என்ற 40 வயது ஓட்டுநர் அந்த பேருந்தை ஓட்டி வந்தார். பல குழந்தைகளை அவரவர் வீடு அருகே அவர் பத்திரமாக கொண்டு சேர்த்தார். ஒரு சில குழந்தைகளை மட்டும் இன்னமும் வீடுகளில் கொண்டு போய் சேர்க்க வேண்டும். அப்போது சாலையில் அதிகமாக தேங்கிய தண்ணீரில் பேருந்து சிக்கி கொண்டது.அந்த பகுதிக்கு அருகே இரண்டு மாணவர்களின் வீடு உள்ளது. இதையடுத்து அந்த மாணவர்களை பேருந்தில் இருந்து பத்திரமாக இறக்கி விட்டார் பிரகாஷ். சற்று தூரம் நடந்த நிலையில் அந்த மாணவர்கள் குழி ஒன்றில் சிக்கினர். வெள்ள நீரில் அவர்கள் மூழ்கும் சூழல் ஏற்பட்டது. அதேசமயம் பேருந்தை சற்று இயக்கி வெள்ளத்தில் இருந்து வெளியே கொண்டு வரும் முயற்சியில் பிரகாஷ் இறங்கி இருந்தார். மாணவர்கள் குழியில் சிக்குவதை பேருந்தில் இருந்து பார்த்த்த ஓட்டுநர் பிரகாஷ் உடனடியாக வெள்ளத்தில் குதித்து அந்த மாணவர்களை விழுந்து விடாமல் தடுத்து காப்பாற்றினார். கடும் போராட்டத்திற்கு இடையே அவர்களை மீட்டு மேடான பகுதியில் கரை ஏற்றினார். ஆனால் நீண்ட நேரம் நிலைமையை சமாளிக்க முடியாத நிலையில் அவவேர வெள்ளத்தில் சிக்கினார்.வெள்ள நீரின் இழுப்பு அதிகமாக இருந்ததால் அருகே இருந்த கால்வாயில் உருண்டு விழுந்து அடித்துச் செல்லப்பட்டார். இதில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார். நீண்ட நேரத்திற்கு பிறகு அவரது உடலை தீயணைப்பு துறையினர் மீட்டனர். தனது பேருந்தில் பயணம் செய்யும் குழந்தைகளை காப்பாற்றச் சென்று உயிரை விட்ட ஓட்டுநர் பிரகாஷின் தியாகத்தை, பள்ளி மாணவர்கள் மட்டுமின்றி அவர்களது பெற்றோரும் கண்ணீர் மல்க போற்றுகின்றனர் உயிரிழந்த ஓட்நர் பிரகாஷூக்கு மனைவியும், இரண்டு குழந்தைகளும் உள்ளனர்.