kunnam_bus_stop
பெரம்பலூர் : குன்னத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்க அலுவலக கட்டடம் மற்றும் பேருந்து நிறுத்தத்தை மாவட்ட ஆட்சியர் டாக்டர்.தரேஸ் அஹமது இன்று திறந்து வைத்தார்.

குன்னத்தில் மாவட்ட ஆட்சியரின் விருப்ப நிதியிலிருந்து ரூ.13.50 லட்சத்தில் கட்டப்பட்டுள்ள பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்க அலுவலக கட்டடம் மற்றும் உள்கட்டமைப்பு இடைவெளி நிரப்பும் திட்டத்தின் கீழ் ரூ.5.75 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள பேருந்து நிறுத்தத்திற்கான பயணியர் நிழற்குடையையும் மாவட்ட ஆட்சியர் டாக்டர்.தரேஸ் அஹமது திறந்து வைத்து, குத்துவிளக்கேற்றி, பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினார்.

பின்னர், மாவட்ட ஆட்சியர் பால் உற்பத்தியாளர்களிடம் பேசியதாவது:

கிராமப்புற பொருளாதாரத்தை மேம்படுத்துவதிலும், கிராமப்புற மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதிலும் முக்கிய பங்கு வகிக்கும் கால்நடைகளை நன்கு பராமரித்திடவும், மேம்பட்ட தரமான மருத்துவ சிகிச்சை கால்நடைகளுக்கு அளிக்கவும், இரண்டாம் வெண்மைப் புரட்சியை ஏற்படுத்திடவும் தமிழ்நாடு முதலமைச்சர் தலைமையிலான அரசு பல்வேறு ஆக்கபூர்வமான திட்டங்களை சிறப்பான முறையில் செயல்படுத்தி வருகிறது.

அதன்படி பெரம்பலூர் மாவட்டத்தினை தொழில் ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் முன்னேற்றமடையச்செய்யும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக பெரம்பலூர் மாவட்டம் பாடலூர் கிராமத்தில், சுமார் 22 ஏக்கர் நிலப்பரப்பளவில், நாளொன்றுக்கு ஒரு லட்சம் லிட்டர் பாலினை கையாளும் திறன் கொண்ட 36 கோடியே 28 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதிய பால்பண்ணை அமைக்கப்ப்ட்டு வருகிறது. இந்த பால்பண்ணையின் மூலம் பால் உற்பத்தியில் பெரம்பலூர் மாவட்டம் புதிய பரிமாணத்தைப் பெறும் என்பதில் அய்யமில்லை. ஆனால் அதற்கு பால் உற்பத்தியாளர்களாகிய உங்களுடைய பங்களிப்பு மிகவும் அவசியமாகும். அந்த வகையில் குன்னம் பால் உற்பத்தியாளர்கள் உங்கள் பகுதியில் இன்னும் அதிகப்படியான பால் உற்பத்தி செய்யும் வகையில் பணியாற்ற வேண்டும். அதற்குத் தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய மாவட்ட நிர்வாகம் தயாராக உள்ளது. உங்கள் சங்கத்திலிருந்து 25,000 லிட்டர் அளவு பால் உற்பத்தி செய்து பாடாலூர் பால்பண்ணைக்கு வழங்கும் வகையில் உங்கள் பணி இருக்கவேண்டும், என ஆட்சியர் பேசினார்.

இந்நிகழ்ச்சியில் வேப்பூர்ஒன்றியக்குழுத் தலைவர; திரு.கிருஷ்ணகுமார், பெரம்பலூர் நகர்மன்றத் துணைத்தலைவர் ஆர்.டி.இராமச்சந்திரன், மாவட்ட ஊராட்சிக்குழுத்தலைவர், சகுந்தலாகோவிந்தன், பால்வளத்துறை துணைப்பதிவாளர் பாலசுந்தரம், பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கத் தலைவர்கள் குணசீலன்(குன்னம்), கர்ணன்(ஆலத்தூர்), ஊராட்சி மன்றத்தலைவர்கள் இளங்கோவன் (குன்னம்), நாகராஜன்(சித்தளி), ஒன்றிய கவுன்சிலர் அமுதா, வட்டார வளர்ச்சி அலுவலர் பழனிச்சாமி உள்ளிட்ட அலுவலர்கள், உள்ளாட்சி அமைப்பின் பிரதிநிதிகள் பலர் கலந்துகொண்டனர்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!