Will the DMK drop the decision to form a coalition with the Communist and Congress Party that voted against social justice? PMK President G.K.Mani

GK Mani

சமூகநீதியைக் பாதுகாப்பதில் பாட்டாளி மக்கள் கட்சி யாருக்கும் சளைத்ததல்ல! இன்று விடுத்துள்ள அறிக்கையில் பாமக தலைவர் கோ.க.மணி தெரிவித்துள்ளார். மேலும், கூறியிருப்பதாவது:

பார்வையற்றோர் யானையின் உருவத்தைத் தடவித் தடவி கண்டுபிடிக்க முயன்றதைப் போன்று, பொருளாதார அடிப்படையில் பின்தங்கிய உயர்சாதியினருக்கு 10% இட ஒதுக்கீடு வழங்குவது குறித்த விவகாரத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் நிலைப்பாடு என்ன? என்பது குறித்து திமுக உள்ளிட்ட சில கட்சிகளும், அமைப்புகளும் விவாதித்துக் கொண்டிருக்கின்றன. பொருளாதார அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்குவது உள்ளிட்ட சமூக நீதி சார்ந்த அனைத்து விஷயங்களிலும் பா.ம.க.வின் நிலைப்பாடு தெளிவாக உள்ள நிலையில், சமூகநீதியில் பார்வைக் குறைபாடு கொண்ட கட்சிகள் தான் அதை புரிந்து கொள்ள முடியாமல் குழம்பிக் கொண்டிருக்கின்றன.

‘‘எந்தப் பிரச்சினையிலும் முந்திக் கொண்டு அறிக்கை வெளியிடும் பா.ம.க. நிறுவனர் மருத்துவர் அய்யா 10 சதவீத இட ஒதுக்கீட்டு பிரச்சினையில் பா.ஜ.க. அரசைக் கண்டித்து அறிக்கை வெளியிடவில்லை. ‘சமூக நீதி எங்கள் உயிர்’ என்று மூச்சுக்கு முந்நூறு தடவை சொல்லும் பா.ம.க. நாடாளுமன்றத்தில் 10% இட ஒதுக்கீடு மசோதாவை எதிர்க்கவில்லை. இதன்மூலம் சமூகநீதி விவகாரத்தில் பா.ம.க.வின் இரட்டை வேடம் கலைந்திருக்கிறது’’ என்று திமுகவின் அதிகாரப்பூர்வ இதழான முரசொலியில் பெட்டிச் செய்தி வெளியாகி உள்ளது. எந்தப் பிரச்சினையிலும் முந்திக் கொண்டு அறிக்கை வெளியிடுபவர் பா.ம.க. நிறுவனர் மருத்துவர் அய்யா அவர்கள் தான் என்ற உண்மையையும், சமூக நீதி எங்கள் உயிர் என்று பாட்டாளி மக்கள் கட்சி மூச்சுக்கு முந்நூறு சொல்கிறது என்ற உண்மையையும் ஒப்புக்கொண்ட முரசொலி நாளிதழுக்கு நன்றி. அதேநேரத்தில் திமுக தலைமை மற்றும் முரசொலி நாளிதழின் அறியாமையை நினைத்து பரிதாபம் தான் வருகிறது.

பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர்சாதியினருக்கு 10% இட ஒதுக்கீடு இட ஒதுக்கீடு வழங்குவது குறித்த மத்திய அமைச்சரவையின் முடிவு குறித்த அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள் ஜனவரி 7&ஆம் தேதி பிற்பகல் 3 மணிக்கு தான் கசிந்தன. ஓரளவு விவரம் வெளியான போது நேரம் மாலை 4.00 மணி. மத்திய அமைச்சரவையின் இந்த முடிவைக் கடுமையாக விமர்சித்து பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞரணித் தலைவரும், மக்களவை உறுப்பினருமான மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அன்று மாலை 4.37 மணிக்கு அறிக்கை வெளியிட்டார். ‘‘பொருளாதார அடிப்படையில் இட ஒதுக்கீடு தவறு: சமூக நிலையே சரியான அளவீடு!’’ என்ற தலைப்பில் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் வெளியிட்ட அறிக்கையில், மத்திய அரசின் முடிவு இந்திய அரசியலமைப்புச் சட்டத்துக்கும், உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்புகளுக்கு எந்தெந்த வகைகளில் எல்லாம் எதிராக அமைந்துள்ளது என்பது குறித்து விரிவாக விளக்கப்பட்டிருந்தது. உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டால் இந்த ஒதுக்கீடு நிலைக்காது என்பதையும் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் கடந்த கால உதாரணங்களுடன் விளக்கியிருந்தார்.

அதேநேரத்தில் மத்திய அரசின் முடிவைக் கண்டித்து பாமக நிறுவனர் ராமதாஸ் இரு டுவிட்டர் பதிவுகளை வெளியிட்டிருந்தார். ‘‘ பொருளாதார அடிப்படையில் பின்தங்கிய உயர்சாதி மக்களுக்கு 10% இட ஒதுக்கீடு வழங்க மத்திய அரசு தீர்மானித்திருப்பது மிகப்பெரிய சமூக அநீதி ஆகும். இந்த முடிவை மத்திய அரசு கைவிட வேண்டும்’’ என்று ஒரு டுவிட்டர் பதிவிலும், மற்றொரு டுவிட்டர் பதிவில்,‘‘உண்மையான சமூக நீதி என்பது அனைத்து சமுதாயங்களுக்கும் அவர்களின் மக்கள்தொகைக்கு ஏற்ப இட ஒதுக்கீடு வழங்குவது தான். எனவே, 2021&ஆம் ஆண்டு மக்கள்தொகைக் கணக்கெடுப்பை சாதிவாரி மக்கள்தொகைக் கணக்கெடுப்பாக நடத்தி அனைத்து சமுதாயத்தினருக்கும் மக்கள்தொகைக்கேற்ப 100% இட ஒதுக்கீடு வழங்க வேண்டும்’’ என்றும் மருத்துவர் அய்யா அவர்கள் குறிப்பிட்டிருந்தார். 10 விழுக்காடு இடஒதுக்கீடு விவகாரத்தில் ஓர் அரசியல் கட்சியின் நிலைப்பாட்டை இதைவிட சிறப்பாக யாரும் தெளிவுபடுத்த முடியாது.

10% இடஒதுக்கீடு விவகாரம் குறித்து அதுகுறித்த தகவல் வெளியான சில நிமிடங்களிலேயே மருத்துவர் அய்யா அவர்களும், மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்களும் பாட்டாளி மக்கள் கட்சியின் நிலைப்பாட்டை தெளிவாகத் தெரிவித்து விட்ட நிலையில், இந்தப் பிரச்சினையில் பா.ம.க. கருத்து தெரிவிக்கவில்லை என்று கூறுபவர்களை எந்த வகையில் சேர்ப்பது என்பது தெரியவில்லை. பகல் 12 மணிக்கு பிரகாசமான வெளிச்சம் இருக்கும் போது, ஒரு பூனை கண்களை மூடிக் கொண்டு இந்த உலகமே இருண்டு விட்டது என்று கூறியதாம். அதைப்போல் தான் மருத்துவர் அய்யா அவர்களும், அன்புமணி இராமதாஸ் அவர்களும் கருத்து தெரிவித்ததை பார்க்காமல் அறியாமை இருளில் மூழ்கிக்கிடந்த சில பூனைகள் தான், இந்த விஷயத்தில் அவர்கள் இருவரும் கருத்துத் தெரிவிக்கவில்லை என்று விட்டத்தில் நின்று தப்பும், தவறுமாக கூவுகின்றன.

உண்மையில் 10% இட ஒதுக்கீடு குறித்த மத்திய அமைச்சரவையின் அறிவிப்பு வெளியான ஜனவரி 7-ஆம் தேதி மருத்துவர் அய்யா, மருத்துவர் அன்புமணி ஆகிய இருவரைத் தவிர வேறு எவரும் கருத்து தெரிவிக்க வில்லை. சமூகநீதிக்காக பொங்கும் முரசொலி இதழை நடத்தும் திமுகவின் தலைவர் மு.க.ஸ்டாலின் அதற்கு அடுத்த நாள் 8-ஆம் தேதி தான் சட்டப்பேரவையில் இது குறித்து பேசினார். 7-ஆம் தேதி இதுபற்றி கருத்து தெரிவிக்கவில்லை. இதற்காக திமுக வேண்டுமானால் இதில் இரட்டைவேடம் போடுவதாகக் கூறலாம்.

10% இட ஒதுக்கீட்டு மசோதாவை எதிர்த்து நாடாளுமன்றத்தில் அன்புமணி எம்.பி ஏன் வாக்களிக்கவில்லை என்று வினா எழுப்பப்படுகிறது. 10% இட ஒதுக்கீடு முடிவை அவசரம், அவசரமாக அறிவித்த மத்திய அரசு, அதே வேகத்தில் மக்களவையில் கொண்டு வந்தது. இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சிக்கு முதன்மை விருந்தினராக அன்புமணி எம்.பி அழைக்கப் பட்டிருந்ததாலும், அந்த நிகழ்ச்சியில் பங்கேற்க அவர் 3 மாதங்களுக்கு முன்பே ஒப்புதல் அளித்திருந்ததாலும் அவரால் நாடாளுமன்றத்தில் நடைபெற்ற விவாதம் மற்றும் வாக்கெடுப்பில் கலந்து கொள்ள முடியவில்லை. அதைத் தவிர பொருளாதார அடிப்படையில் இட ஒதுக்கீடு கூடாது என்பதில் பா.ம.க. உறுதியாக உள்ளது.

பாட்டாளி மக்கள் கட்சியின் அடையாளம் சமூக நீதி தான். அதேபோல், சமூகநீதியின் அடையாளமும் பாட்டாளி மக்கள் கட்சி தான். மத்திய அரசுக்கு சொந்தமான மருத்துவக் கல்வி நிறுவனங்களில் இந்தியா குடியரசாக அறிவிக்கப்பட்ட நாளில் இருந்தே பட்டியலின மற்றும் பழங்குடியின மக்களுக்கு இட ஒதுக்கீடு மறுக்கப்பட்டு வந்த நிலையில், அவர்களுக்கு முறையே 15%, 7.50% இடஒதுக்கீட்டை வழங்கியவர் மத்திய சுகாதாரத்துறை அமைச்சராக இருந்த மருத்துவர் அன்புமணி இராமதாசு தான். அதேபோல், மத்திய அரசின் உயர்கல்வி நிறுவனங்களில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27% இட ஒதுக்கீடு வழங்குவதை ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு மறுத்து வந்த நிலையில், ஐக்கிய முற்போக்குக் கூட்டணி தலைவர்கள் கூட்டத்தில் சோனியாகாந்தி, மன்மோகன்சிங் உள்ளிட்ட தலைவர்களுடன் சண்டையிட்டு, வட இந்தியத் தலைவர்கள் மற்றும் இடதுசாரித் தலைவர்களின் ஆதரவுடன் இட ஒதுக்கீட்டை உடனடியாக செயல்படுத்த வைத்தவர் மருத்துவர் அய்யா அவர்கள் தான். அந்தக் கூட்டத்தில் திமுக சார்பில் பங்கேற்றவர்கள் மருத்துவர் அய்யாவின் குரலுக்கு ஆதரவு கூட தெரிவிக்காமல் வாய்மூடி மவுனியாகத் தான் அமர்ந்திருந்தனர். அப்படிப்பட்ட பாட்டாளி மக்கள் கட்சியுடன் சமூக நீதித் தளத்தில் சமமாக நிற்கும் தகுதி திமுக உள்ளிட்ட எந்தக் கட்சிக்கும் இல்லை.

பாரதிய ஜனதா கட்சியுடன் கூட்டணி அமைப்பதற்கு அச்சாரம் போடுவதற்காகத் தான் இப்படி ஒரு நிலைப்பாட்டை பா.ம.க. எடுத்திருப்பதாக திமுக கூறுகிறது. பாரதிய ஜனதாவுடன் கூட்டணி என்று பா.ம.க. ஒருபோதும் கூறவில்லை. கூட்டணி குறித்து முடிவெடுக்கும் அதிகாரம் மருத்துவர் அய்யா அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. தமிழகத்தின் நலன் காக்கும் வகையில் நல்ல முடிவை மருத்துவர் அய்யா எடுப்பார்கள்.

அதேநேரத்தில் திமுக தலைமை ஒரு விஷயத்தை தெளிவுபடுத்த வேண்டும். உயர்சாதியினருக்கு 10% இட ஒதுக்கீடு வழங்கும் மசோதாவை நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் காங்கிரஸ் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆதரித்து வாக்களித்தன. சமூகநீதிக்கு எதிராக இந்தக் கட்சிகளுடன் மக்களவைத் தேர்தலுக்கு கூட்டணி அமைக்கும் முடிவை திமுக கைவிடுமா? என்பதை திமுக தலைமை அறிவிக்க வேண்டும், என தெரிவித்துள்ளார்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!