பெரம்பலூர் மாவட்டத்தில் 159 மையங்களில் மின் ஆளுமைத்திட்டத்தின் மூலம் பொதுசேவை மையங்கள் அமைக்ப்பட்டுள்ளது – பொதுமக்கள் முழுமையாகப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் – மாவட்ட ஆட்சியர் டாக்டர்.தரேஸ் அஹமது அழைப்பு விடுத்துள்ளார்

அதன் விபரம் வருமாறு:

பெரம்பலூர் மாவட்டத்தில் கடந்த 2012 ஆம் ஆண்டு முதல் மின் ஆளுமைத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகின்றது.

தமிழ்நாட்டிலேயே மின் ஆளுமைத் திட்டத்தை முழுமையாகவும், செம்மையாகவும் பொதுமக்கள் அனைவருக்கும் பயனளிக்கும் வகையில் செயல்படுத்தியதற்காக மாண்புமிகு தமிழக முதலமைச்சரின் விருது நமது மாவட்டத்திற்கு வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த மின்ஆளுமைத்திட்டத்தின் மூலம் பொதுமக்களுக்கு வருமானச்சான்று, சாதிச்சான்று, இருப்பிடச்சான்று உள்ளிட்ட பல்வேறு சான்றிதழ்கள் வழங்கப்படுகிறது.

இச்சான்றிதழ்களுக்காக வேறெங்கும் பொதுமக்கள் அலையாமல் ஒரே இடத்திலேயே அனைத்து சான்றிதழ்களையும் பெறுவது இத்திட்டத்தின் சிறப்பம்சமாகும். பொதுமக்கள் இந்த பெது சேவைமையங்களை முழுமையாகப் பயன்படுத்திக்கொள்ள வேண்டுமென்று மாவட்ட ஆட்சியர் டாக்டர் .தரேஸ் அஹமது வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதுகுறித்து அவர் தெரிவித்துள்ளதாவது:

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள 54 கூட்டுறவு சங்கங்களிலும், 4 வட்டாட்சியர் அலுவலகங்களிலும் செயல்படும் இ-சேவை மையங்களிலும் மின்ஆளுமைத்திட்டத்தின் மூலம் பல்வேறு சான்றிதழ்கள் வழங்கப்பட்டு வருகின்றது. இச்சேவையை மேலும் விரிவுபடுத்தும் நோக்கில் புதுவாழ்வு திட்டத்தின் மூலம் ஊராட்சிப்பகுதிகளில் செயல்படுத்தப்படும் கிராம வறுமை ஒழிப்பு சங்கங்கள் மூலமாகவும் மின்ஆளுமைத்திட்ட பொது சேவை மையங்களை நிறுவ திட்டமிடப்பட்டது.

பெரம்பலூர் மாவட்டத்தில் புதுவாழ்வு திட்டம் மூலம் கிராம வறுமை ஒழிப்பு சங்கங்கள் வேப்பூபு, ஆலத்தூர் மற்றும் வேப்பந்தட்டை ஆகிய மூன்று வட்டாரங்களில் செயல்பட்டு வருகிறது.

இத்திட்டத்தின் மூலம் குழுக்களை வலுப்படுத்தி பயிற்சியளித்து நிதி இணைப்பு பெற்று தரப்பட்டு வருகிறது. மாற்றுத்திறனாளிகள் மற்றும் நலிவுற்றோர்கள் வாழ்வில் முன்னேற்றடைய சிறுதொழில் தொடங்க தனிநபர் கடன் வழங்கியும், மாற்றுத்திறனாளிகளுக்கு தேவையான உதவி உபகரணங்களும் பெற்று தரப்பட்டு வருகிறது.

இளைஞர்களுக்கு தொழில் பயிற்சி கிராம வறுமை ஒழிப்பு சங்கம் மூலம் வழங்கப்படுகிறது. இத்துடன் கிராம மக்கள் அவரவர் ஊராட்சியிலேயே கிராம கற்றல் மையம் அமைத்து போட்டித் தேர்வாளர்கள் படித்து பயன்பெறும் வகையில் போட்டித்தேர்வு, புத்தகங்கள் மற்றும் அந்தந்த ஊராட்சியிலேயே பயன்பெற வசதிகள் செய்யப்பட்டுள்ளது. அதன் தொடர்ச்சியாக ஆரம்பத்தில் 36 வறுமை ஒழிப்பு சங்கங்களில் சேவை மையம் அமைக்கப்பட்டது.

பொதுமக்களிடையே அதிக வரவேற்பைப் பெற்றதன் மூலம் மேலும் 65 கிராம ஒழிப்பு சங்கங்களில் பொதுசேவை மையம் துவக்கப்பட்டுள்ளது. ஆகமொத்தம் புதுவாழ்வுத்திட்டத்தின் மூலம் வேப்பூர், வேப்பந்தட்டை மற்றும் ஆலத்தூர் ஆகிய பகுதிகளில் 101 ஊராட்சிகளில் உள்ள சுயஉதவிக்குழு அலுவலகங்களில் மின் ஆளுமைத்திட்டத்தின் பொதுசேவை மையம் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.

இந்த பொதுசேவை மையங்களில் வருமானச்சான்று, சாதிச்சான்று, இருப்பிடச்சான்று, ஆதரவற்ற விதவைச்சான்று, முதல்பட்டதாரிக்கான சான்று உள்ளிட்ட சான்றிதழ்களைப்பெற ஒரு சான்றிதழுக்கு ரூ.50 கட்டணமாகவும், சமூக நலத்திட்டங்களான திருமண நிதியுதவித்திட்டம், பெண்குழந்தைகள் பாதுகாப்புத்திட்டம் உள்ளிட் திட்டங்களுக்கு விண்ணப்பிக்க ரூ.100 கட்டணமாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பித்ததற்கான ஒப்புகை சீட்டு அனைவருக்கும் உடனுக்குடன் வழங்கப்படும்.

மேலும், இந்த மையங்களில் அரசு பணியாளர் தேர்வாணைய (டி.என்.பி.எஸ்.சி) வங்கி பணிகள் மற்றும் பொதுத்தேர்வுக்கான விண்ணப்பங்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்கும் வசதி, மின் கட்டணம் மற்றும் தொலை பேசி கட்டணம் ஆகிய கட்டணங்களை செலுத்தவும் வழி வகை செய்யப்பட்டுள்ளது. எனவே மக்கள் அனைவரும் இந்த அரிய வாய்யப்பினை பயன்படுத்தி கொள்ள வேண்டும். இவ்வாறு மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!