Forest Guard suspends arrested in corruption case; Namakkal District Forest Officer Order

லஞ்ச வழக்கில் கைதான வனக் காப்பாளரை சஸ்பென்ட் செய்து மாவட்ட வன அலுவலர் உத்தரவிட்டார்.

சேலம் மாவட்டம் பனமரத்துப்பட்டி அருகே தும்பல்பட்டியைச் சேர்ந்தவர் மலையன். இவரது வளர்ப்பு நாய் மூங்கில்மலை பகுதியில் இருந்து கடந்த வாரம் உடும்பு ஒன்றை பிடித்து வந்தது. இதை மலையன் சமைத்து வைத்து இருந்தார். இதற்கிடையே இதுகுறித்து தகவல் அறிந்த ராசிபுரம் வன சரகத்துக்கு உட்பட்ட திருமனூர் வனக் காப்பாளர் சுப்பிரமணி, மலையன் வீட்டுக்கு சென்று உடும்பை சமைத்து வைத்த குற்றத்துக்காக வனவிலங்கு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்வதாக மிரட்டி உள்ளார். மேலும் கைது செய்யாமல் இருக்க உடனடியாக ரூ. 2,500 லஞ்சம் தர வேண்டும் எனக் கேட்டுள்ளார்.

லஞ்சம் கொடுக்க மனம் இல்லாத மலையன் இது குறித்து சேலம் மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்தார். அவர்கள் கொடுத்த ஆலோசனையின்பேரில் தும்பல்பட்டிக்கு கடந்த 28-ஆம் தேதி வந்த வனக் காப்பாளர் சுப்பிரமணியிடம் மலையன் ரூ. 2,500-ஐ கொடுத்தார். அப்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீஸார் சுப்பிரமணியை கைது செய்தனர். பின்னர் அவர் சேலம் சிறையில் அடைக்கப்பட்டார்.

இதையடுத்து கைதான சுப்பிரமணி மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க போலீஸார் வனத்துறை அதிகாரிகளுக்கு பரிந்துரை செய்தனர். அவர்களின் பரிந்துரையை ஏற்று நாமக்கல் மாவட்ட வன அலுவலர் காஞ்சனா, லஞ்ச வழக்கில் கைதான சுப்பிரமணியை சஸ்பென்ட் செய்து உத்தரவிட்டார். இதற்கான உத்தரவின் நகலை சுப்பிரமணியிடம் வனத்துறையினர் ஒப்படைத்தனர்.

Tags:

Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!