21 assembly constituencies in the state, to hold local elections soon, KMDK Eswaran request

தமிழகத்தில் காலியாக உள்ள 21 சட்டசபை தொகுதிகளுக்கும், உள்ளாட்சி அமைப்புகளுக்கும் விரைவாக தேர்தல் நடத்த வேண்டும் என்று கொமதேக ஈஸ்வரன் தேர்தல் கமிஷனுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் ஈஸ்வரன் நாமக்கல்லில் அளித்த பேட்டி :
தமிழகத்தில் தேர்தல் என்பதே இனி நடக்காதா? என்கிற சந்தேகத்தை மக்களிடம் தேர்தல் கமிஷன் ஏற்படுத்தியுள்ளது. திருவாரூர் தேர்தலை அறிவித்துவிட்டு, புயல் நிவாரணங்கள் என கூறி, ரத்து செய்யப்பட்டு உள்ளது. தேர்தல் கமிஷன், தலைமை செயலாளரிடம் கேட்காமலா அறிவிக்கும்.
இதெல்லாம் மிகப்பெரிய சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. இனி எந்த தேர்தலை தேர்தல் கமிஷன் அறிவித்தாலும், அது நடக்குமா ? என்ற சந்தேகம் மக்களிடையே வருவதை தவிர்க்க முடியாது.
தமிழகத்தில் 21 தொகுதிகள் எம்எல்ஏக்கள் இல்லாமல் காலியாக உள்ளது. அதிலும் 18 தொகுதிகள் ஆண்டு கணக்கில் காலியாக இருக்கின்றன. எம்எல்ஏக்கள் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் இல்லாமல் வளர்ச்சி திட்டங்களை எப்படி நிறைவேற்ற முடியும். எனவே காலியாக உள்ள 21 தொகுதிகளுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவதற்கு கமின் முன்வர வேண்டும்.
உள்ளாட்சி தேர்தலையும் இதற்கு மேலும் தாமதப்படுத்தாமல், உடனடியாக நடத்த முன்வர வேண்டும். தமிழக அரசு நிதி நெருக்கடியில் உள்ளது, அதே நேரத்தில் ரேஷன் கார்டுக்கு ஆயிரம் ரூபாய் என்பது தேவையான மக்களுக்கு, அது தேவையாகவும் இருக்கிறது.
ஆயிரம் ரூபாயை வைத்து பொங்கலை சிறப்பாக கொண்டாட வாய்ப்பு உள்ளது. ஆயிரம் ரூபாயை வசதியானவர்களுக்கு வழங்குவது தேவையற்றது. அதை தான் சென்னை ஐகோர்ட்டும் குறிப்பிட்டு சொல்லி இருக்கிறது. எந்தவிதமான இலவசமாக இருந்தாலும், தேவையானவர்களுக்கு செய்வது தான் அவர்களுக்கு உதவியாக இருக்கும்.
அனைவருக்கும் ஆயிரம் ரூபாய் என சொல்வதில் தான் சந்தேகம் இருக்கிறது. எதை செய்தாலும் ஒரு தேர்தல் நோக்கம் இருக்கத் தான் செய்கிறது. பார்லி தேர்தல் விரைவில் வர இருக்கும் காரணத்தினால் இப்படிப்பட்ட முடிவுகளை எடுத்துள்ளனர். கோர்ட் தீர்ப்பு வந்தாலும், கொடுப்பதை கொடுத்துக் கொண்டு தான் இருக்கிறார்கள்.
கோர்ட்டு தீர்ப்பு நிறுத்தாது என்பதுதான், நாம் புரிந்து கொள்கிற விஷ்யம். தி.மு.க. கூட்டணியில் தான் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி தொடந்து செயல்பட்டு கொண்டிருக்கிறது. இதற்கான கேள்விக்கு இடமே கிடையாது.
தொகுதி சம்மந்தமான விஷயம் இதுவரை பேசப்படவில்லை. தேவை வரும் போது பேசப்படும். கள்ளக்குறிச்சி தனி மாவட்டமாக பிரிக்கப்பட்டதற்கு வரவேற்பை தெரிவித்து கொள்கிறேன். அதேபோல் பொள்ளாச்சி மற்றும் கோபியையும் தனி மாவட்டமாக பிரிக்க வேண்டும், என தெரிவித்தார்.
தொடர்ந்து கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் மாவட்ட செயற்குழு கூட்டத்தில் ஈஸ்வரன் பேசினார். இந்த கூட்டத்தில் பேரவை தலைவர் தேவராசன், மாவட்ட செயலாளர் மாதேஸ்வரன், செயற்குழு உறுப்பினர்கள் சின்ராஜ், துரை, மாவட்ட பொருளாளர் மணி, துணை செயலாளர்கள் செல்வராஜ், பால் கந்தசாமி, குமரேசன் உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.