25% increase in truck fares: immediate solution for petrol and diesel prices Anbumani

file


பா.ம.க. இளைஞரணித் தலைவர் அன்புமணி விடுத்துள்ள அறிக்கை :

பெட்ரோல், டீசல் விலை உயர்வின் பாதக விளைவுகள் வெளிப்படத் தொடங்கியுள்ளன. தமிழ்நாட்டில் சரக்குந்து வாடகை 25% உயர்த்தப்பட்டுள்ளன. இதனால் அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் உயரும் சூழல் உருவாகியுள்ள நிலையில், இதைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டிய மத்திய, மாநில அரசுகள் கை கட்டி வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பது கண்டிக்கத்தக்கது ஆகும்.

சரக்குந்து கட்டண உயர்வு காரணமாக சென்னையிலிருந்து சேலத்திற்கான வாடகை 8500 ரூபாயிலிருந்து ரூ.10,000 ஆக அதிகரித்திருக்கிறது. தமிழகத்திலிருந்து புதுதில்லி உள்ளிட்ட வட மாநிலங்களுக்கு செல்வதற்கான வாடகை ரூ.1.25 லட்சத்திலிருந்து ரூ.1.40 லட்சமாக உயர்த்தப்பட்டிருக்கிறது. இது மிக அதிகமான உயர்வு ஆகும். இதனால் அரிசி, காய்கறிகள், பால் உள்ளிட்ட அனைத்து வகையான அத்தியாவசியப் பொருட்களின் விலைகளும் கடுமையாக உயரும். ஏற்கனவே வேலையில்லாத் திண்டாட்டம், விலைவாசி உயர்வு உள்ளிட்டவற்றால் ஏழை மற்றும் நடுத்தர மக்கள் தவிக்கும் நிலையில் இந்த புதிய கட்டண உயர்வு மக்களை வாழ முடியாத நிலைக்கு தள்ளிவிடும் என்பதில் ஐயமில்லை.

அதேநேரத்தில், பெட்ரோல், டீசல் விலைகள் கட்டுப்பாடின்றி அதிகரித்து வரும் நிலையில், சரக்குந்து வாடகையை உயர்த்தாமல் இருப்பதும் சாத்தியமில்லை. பெட்ரோல், டீசல் விலைகளை தினமும் நிர்ணயம் செய்யும் முறை நடைமுறைப்படுத்தப்பட்ட பிறகு இன்று வரை பெட்ரோல் விலை லிட்டருக்கு 20.85 ரூபாயும், டீசல் விலை 21.48 ரூபாயும் உயர்த்தப்பட்டுள்ளன. அதாவது கடந்த 15 மாதங்களில் பெட்ரோல் விலை 32 விழுக்காடும், டீசல் விலை 38 விழுக்காடும் உயர்ந்துள்ளன. இது வரலாறு காணாத விலை உயர்வு ஆகும். இதை சமாளிக்க முடியாமல் தான் சரக்குந்து நிறுவனங்கள் வாடகையை உயர்த்தியுள்ளன.

சரக்குந்து வாடகை உயர்வு பிரச்சினைக்கு தீர்வு காண்பதும், அதனால் ஏற்படும் விளைவுகளை கட்டுப்படுத்துவதும் மத்திய, மாநில அரசுகளின் கடமை ஆகும். பெட்ரோல், டீசல் விலைகளை கணிசமாக குறைப்பதன் மூலம் தான் இந்தப் பிரச்சினைக்கு தீர்வு காண முடியும். எனவே, மத்திய, மாநில அரசுகள் தங்களால் முடிந்த அளவுக்கு வரிகளைக் குறைத்து பெட்ரோல், டீசல் விலைகளையும், அதன்மூலமாக சரக்குந்து வாடகையை குறைக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்துகிறேன். சரக்குந்து உரிமையாளர்களும் வாடகையை தங்களால் முடிந்த அளவுக்கு குறைக்க முன்வர வேண்டும், என தெரிவித்துள்ளார்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!