தூத்துக்குடி கடல் பகுதியில் மணிக்கு 82 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசுவதால் முன்றாவது நாளாக மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை. தூத்துக்குடியில் உள்ள மீன்பிடி துறைமுகத்தில் இருந்து 250க்கும் மேற்பட்ட விசைபடகுகள் மீன்பிடிதொழில் செய்து வருகின்றன. மீன்பிடி தடைக்காலத்துக்கு பிறகு கடந்த சில வாரங்களாக விசைபடகுகள் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருகின்றன. இந்த நிலையில் தூத்துக்குடி கடல் பகுதியில் காற்றின் வேகம் அதிகமும், கடல் அலையின் சீற்றமும் அதிகமாக இருக்கும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியிருந்தது. இதைத் தொடர்ந்து தூத்துக்குடி மீன்வளத்துறை அதிகாரிகள், அனைத்து மீனவ கிராமங்களையும் தொடர்பு கொண்டு கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கை விடுத்து இருந்தனர். காற்றின் வேகம் தொடர்ந்து அதே நிலையில் நீடித்து வருவதால், தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தில் உள்ள சுமார் 250 விசைப்படகுகள் கடந்த 9 ஆம் தேதி முதல் கடலுக்கு செல்லாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இதனால் மீனவர்களுக்கு அரசு நிவாரணம் வழங்கவேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.