300 year old Telugu inscription discovered in Perambalur!

பெரம்பலூர் வெள்ளந்தாங்கி அம்மன் ஏரியின் கிழக்குக் கரையில் தெலுங்கு மொழியில் அமைந்த 300 ஆண்டுகளுக்கு முந்தைய நாயக்கர் காலத் தூம்புக் கல்வெட்டு கண்டறியப்பட்டுள்ளது.

சூழலியல் செயல்பாட்டாளர் ரமேஷ் கருப்பையா, வரலாற்று ஆய்வாளர் முனைவர் மகாத்மா செல்வபாண்டியன் ஆகியோர் பெரம்பலூர் வெள்ளந்தாங்கி அம்மன் ஏரிப்பகுதியின் மேற்பரப்பில் கள ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது இரட்டைத் தூணுடன் கூடிய தூம்புக் கல்வெட்டு இருப்பதைக் கண்டறிந்தனா;. அதனைப் படி எடுத்து தொல்லியல் அறிஞர் சு.இராஜகோபால் மற்றும் மைசூரில் உள்ள முனைவர் முனிரத்னம் ஆகியோரிடம் அனுப்பி வைத்தனர். அவர்கள் ஆய்வு செய்ததின் அடிப்படையில் அது, கி.பி. 17ம் நூற்றாண்டைச் சார்ந்த நாயக்கர் காலக் கல்வெட்டு எனக் கண்டறியப்பட்டுள்ளது.

இது குறித்து ரமேஷ் கருப்பையா, மகாத்மா செல்வபாண்டியன் ஆகியோர் தெரிவித்ததாவது:

செல்வபாண்டியன் – ரமேஷ் கருப்பையா

சங்க காலம் முதலே காலத்தில் அரசர்களும் நிர்வாகப் பொறுப்பில் இருந்தவர்களும் நீர்நிலைகளை உருவாக்கி அதைப் பாசனத்திற்கும் பிற தேவைகளுக்கும் முறைப்படுத்த தூம்புகளை அமைத்துள்ளனர். இதற்கான சான்றுகளை சங்க இலங்கியங்கள் பல்லவர், சோழர், பாண்டியர், முதல் நாயக்கர் காலம் வரையிலான கல்வெட்டுகள் வழி அறியலாம். பொதுவாக ஏரிக்கரையில் இருந்து சற்றுத் தொலைவில் ஏரியின் உட்பகுதியில் குமிழ்த் தூம்புகள் அமைக்கப்படும்.

ஏரியின் தரைமட்டத்தில் கருங்கற்களாலான தொட்டி கட்டப்பட்டு அதன் துளையின் மூலம் சுரங்கக் கால்வாய் வழியாக நீர் சென்று வெளியே இருக்கும் பாசனக் கால்வாயை அடையும் விதத்தில் அமைக்கப்பட்டிருக்கும். பாசனத் தேவைக் கேற்ப வெளிச்செல்லும் நீரின் அளவை கூட்டவும் குறைக்கவும் தூம்புக் கல் உதவும் இதனை மேலும் கீழும் இயக்குவதற்கு ஏதுவாக கற்சட்டம் அமைக்கப்பட்டிருக்கும். ஆங்கிலேயர் காலத்தில், பொதுப்பணித்துறை நீர்நிலைகளைப் பராமரிக்கத் தொடங்கியதால் தூம்புகள் கைவிடப்பட்டன.

கல்வெட்டுச் செய்தி :

மதகுப் பகுதியிலிருந்து சுமார் 20 அடி தொலைவில் 10 அடி உயரத்தில் இரண்டு தூண்களும் அவற்றுக்கு இடையில் குறுக்கு விட்டங்களும் காணப்படுகின்றன. வடபுறம் உள்ள தூணின் வெளிப் புறத்தில ஏழு வாpகளில் அமைந்த தெலுங்குக் கல்வெட்டு பொறிக்கப்பட்டுள்ளது.

‘வியய சம்வஸ்த
ரம் வையாசி நெ
ல 29தி தம
ன்யம் வெங்க்கட
சய்யா செய்ன்சி
ந தூம்பு
சுப மஸ்து’

இதன் பொருள், ‘வியய ஆண்டு வைகாசி மாதம் 29ம் தேதி தமன்யம் வெங்க்கடசய்யா செய்து வைத்த தூம்பு’ என்பதாகும். இதன் காலம் கி.பி.17ம் நூற்றாண்டு ஆகலாம்.

பெரம்பலூர் மாவட்டத்தில், சாத்தனூரில் 12ம் நூற்றாண்டு அளவில் அரங்கன் அணியன் சாத்தனூருடையான், கொளக்காநத்தத்தில் 13ம் நூற்றாண்டு அளவில் ஊற்றத்தூரைச் சேர்ந்த சுருதிமான் ஜனநாதன் அரையதேவன் ஆன வாணவிச் சாதிர நாடாழ்வான், அம்மாபாளையத்தில் 13ம் நூற்றாண்டளவில் நாவறப்ப நங்கிழான் நாயன் சேதியன் ஆகிய பெருமக்கள் தூம்புகளைச் செய்து வைத்ததை அங்குள்ள கல்வெட்டுகள் வழி அறிய வருகிறோம்.

இவற்றின் வழியாக பலநூறு ஆண்டுகளுக்கு முன்பே பெரம்பலூர் மாவட்டத்தில் நீர் மேலாண்மை மிகச் சிறப்பாகப் பேணப்பட்டு வந்ததை அறிய முடிகிறது. தமிழக அரசு இந்தத் தூம்பினை வரலாற்றுச் சின்னமாக அறிவித்துப் பாதுகாக்க வேண்டும், என தெரிவித்தனர்.

 

 


Copyright 2015 - © 2023 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!