A cash prize of Rs.10,000 each for students who memorize and compare all 1330 Kuratbhas; Perambalur Collector Information!

பெரம்பலூர் கலெக்டர் வெங்கடபிரியா விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:

உலகப் பொதுமறையாம் திருக்குறளில் உள்ள கருத்துக்களைப் பள்ளி மாணவர்கள் இளம்வயதிலேயே அறிந்து கொண்டு, கல்வியறிவோடு நல்லொழுக்கம் மிக்கவர்களாக விளங்கும் வகையில் தமிழக அரசால் “திருக்குறள் முற்றோதல் பாராட்டுப் பரிசுத்” திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது. 1330 குறட்பாக்களையும் மனனம் செய்து ஒப்பிக்கும் மாணவ / மாணவியர்களுக்குத் தலா ரூ.10,000/- (ரூபாய் பத்தாயிரம் மட்டும்) ரொக்கப் பரிசாகத் தமிழ் வளர்ச்சித் துறையால் ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகின்றது.

2022-23 ஆண்டில் இத்திட்டத்தின் கீழ் போட்டியில் பங்கேற்கும் மாணவர்கள் 1330 குறட்பாக்களையும் ஒப்பிக்கும் திறன் கொண்ட மாணவர்களாக இருக்க வேண்டும். இயல் எண், அதிகாரம் எண், குறள் எண், போன்றவற்றை தெரிவித்தால் அதற்கான திருக்குறளை சொல்லும் திறன் பெற்றவராக இருக்க வேண்டும். திருக்குறளின் அடைமொழிகள், சிறப்புகள், சிறப்புப்பெயர்கள் போன்றவற்றையும் அறிந்திருக்க வேண்டும். திருக்குறளின் பொருளை அறிந்திருந்தால் கூடுதல் தகுதியாக கருதப்படும்.

பெரம்பலூர் மாவட்டத்தில் 1330 குறட்பாக்களையும் மனனம் செய்து ஒப்பிக்கும் திறன் பெற்ற மாணவ/மாணவியர் இருப்பின் இப்போட்டியில் பங்கேற்கலாம். ஏற்கனவே இந்த போட்டியில் பரிசு பெற்றவர்கள் மீண்டும் இந்தப் போட்டியில் கலந்து கொள்ளக் கூடாது.

போட்டியில் கலந்து கொள்ள விரும்பும் மாணவர்கள் வருகின்ற 28.12.2022 அன்று மாலைக்குள் பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் உள்ள தமிழ் வளர்ச்சி உதவி இயக்குநர் அலுவலகத்தில் விண்ணப்பம் பெறலாம் அல்லது தமிழ் வளர்ச்சித்துறையின் வலைதளத்திலோ (https://tamilvalarchithurai.tn.gov.in) இலவசமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இதுகுறித்த மேலும் விவரங்களுக்கு 04328-225988 என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு பயன்பெறலாம், என தெரிவித்துள்ளார்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News Today - Kalaimalar.

error: Content is protected !!