A.Raja MP 10 thousand financial assistance for 2 girls with liver disease;On behalf of the government, in the first phase give medicines for 2 months, Perambalur MLA. Provide Consolation!

பெரம்பலூர் மாவட்டம், பூலாம்பாடியில் வசித்து வரும் பானுமதி என்பவரின் 2 பெண் குழந்தைகளும் கல்லீரல் வீக்கத்தால் சுமார் 14 ஆண்டுகள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது, தொடர்ந்து சிகிச்சை பெறவும் மருந்து மாத்திரைகள் வாங்கவும் இயலாமல் இருந்து வந்த நிலையினை தெரிவித்து தனக்கு உதவ வேண்டும் என புதிய தலைமுறை தொலைக்காட்சி வாயிலாக அரசிற்கு கோரிக்கை வைத்ததன் அடிப்படையில், பெரம்பலூர் தொகுதி எம்.எல்.ஏ பிரபாகரன் மற்றும் சுகாதாரத்துறை துணை இயக்குநர் செந்தில்குமார் ஆகியோர் இன்று பானுமதியின் வீட்டிற்கு நேரில் சென்று குழந்தைகளை சந்தித்து ஆறுதல் கூறி, மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின் மூலம் முதற்கட்டமாக 2 மாதங்களுக்கு தேவையான மருந்துகளை வழங்கினர்.

பின்னர் பெரம்பலூர் எம்.எல்.ஏ பிரபாகரன் தெரிவித்ததாவது:

கூலி வேலை செய்து தனது குடும்பத்தை நடத்தி வரும் பானுமதி என்பவரின் 2 மகள்கள் பிறந்த 10 மாதங்கள் முதல் கல்லீரல் வீக்க நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நோயால் பாதிக்கப்பட்ட தனது 2 மகள்களையும் பல்வேறு தனியார் மருத்துவமனைகளுக்கு அழைத்துச் சென்று பரிசோதனை மேற்கொண்டதில் கல்லீரல் வீக்கத்திற்கான மருந்துக்களை தொடர்ந்து எடுத்துக் கொள்ள வேண்டும் என அறிவுறுத்தி உள்ளார்கள்.

அதன்படி கடந்த 14 ஆண்டுகளாக சிகிச்சைக்கான மருந்து மாத்திரைகளை தனியார் அமைப்பின் உதவி மூலம் எடுத்து வந்தனர். தற்போது பொருளாதார சூழ்நிலையின் காரணமாக மருந்துக்களை வாங்க முடியாத காரணத்தினால் தனது இரண்டு பெண் குழந்தைகளின் மருத்துவம் மற்றும் சிகிச்சைக்கு உதவி செய்ய வேண்டுமென குழந்தைகளின் தாய் பானுமதி தமிழக அரசிற்கு கோரிக்கை விடுத்திருந்தார்.

அதனைத் தொடர்ந்து, தமிழ்நாடு முதலமைச்சர் தலைமையிலான அரசு இக்கோரிக்கையினை பரிசீலித்து உடனடியாக தீர்வு காணும் வகையில், இன்று நானும், சுகாதாரத்துறை துணை இயக்குநர் தலைமையிலான மருத்துவக் குழுவினரும் நேரில் குழந்தைகளை பார்வையிட்டு, ஆறுதல் கூறினோம்.

ஏழை எளிய மக்களுக்கும் தரமான மருத்துவ சேவை அவர்களின் வீடுகளுக்கே சென்று வழங்கப்பட வேண்டும் என்ற உயரிய நோக்கத்தில் அறிவித்து செயல்படுத்தி வரும், மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின் மூலம் முதற்கட்டமாக 2 மாதத்திற்கு தேவையான மருந்துகளை வழங்கினோம். இனி வரும் காலங்களில் மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் மருந்துகளை அவர்களது வீட்டிற்கே சென்று வழங்குவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது, என தெரிவித்தார்.

மேலும் நீலகிரி எம்.பியும், திமுக துணைப் பொதுச் செயலாளருமான .ஆ.இராசா சார்பில் குழந்தைகளின் பராமரிப்பு செலவிற்காக ரூ.10 ஆயிரத்தை எம்.எல்.ஏ பிரபாகரன் குழந்தைகளின் பெற்றோர்களிடம் வழங்கி இனி வரும் காலங்களில் குழந்தைகளின் சிகிச்சை தொடர்பாக அனைத்து உதவிகளையும் தமிழ்நாடு முதலமைச்சரின் தலைமையிலான அரசு மேற்கொள்ளும் என்றும் தெரிவித்தார்.

16 ஆண்டுகளாக குழந்தைகளின் மருத்துவத்திற்காக மிகவும் சிரமப்பட்ட நிலையில், அரசே வீடு தேடி வந்து உரிய மருந்துகளை வழங்கியுள்ளதில் மிகவும் நெகிழ்ச்சியடைந்த குழந்தைகளின் பெற்றோர் தமிழ்நாடு முதலமைச்சருக்கு தங்கள் நன்றியினை தெரிவித்தனர்.

இதில் மாவட்ட வழக்கறிஞர் அணி அமைப்பாளர் ப. செந்தில்நாதன், வேப்பந்தட்டை யூனியன் சேர்மன் ராமலிங்கம், சுகாதார பணிகள் (திட்ட மேலாளர்) கலைமணி, வட்டார மருத்துவ அலுவலர் பிரேம்குமார், மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினர் பாஸ்கர், ஒன்றிய செயலாளர்கள் நல்லதம்பி, ஜெகதீசன், பூலாம்பாடி பேரூராட்சி துணைத் தலைவர் செல்வலெட்சுமி சேகர், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

கடந்த 14 ஆண்டுகளுக்கு மேலாகவும், தொடர்ந்தும், அந்த கல்லீரல் பாதிக்கப்பட்ட 2 பெண் குழந்தைகளுக்கு, அந்த ஊரை சேர்ந்த பன்னாட்டு தொழிலதிபர் டத்தோ எஸ். பிரகதீஸ்குமார் என்பவர் மருத்துவ செலவுகளுக்காக தொடர்ந்து உதவி செய்து வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!