AIADMK councilor, Sitting in Panchayat President chair near Perambalur: Police investigation reveals President’s husband’s involvement: case withdrawn

பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட பாடாலூர் ஊராட்சி அலுவலகத்தில் சில நாட்களுக்கு முன்பு அத்துமீறி உள்ளே நுழைந்த அதிமுகவை சேர்ந்த கவுன்சிலர் விஜய் பிரபு என்பவர் அங்கிருந்த ஊராட்சி தலைவரின் நாற்காலியில் அமர்ந்து கொண்டு பைல்களை எடுத்து திருத்தியதாகவும், தலைவர், அவரது கணவர் உள்ளிட்டோரை தரக்குறைவாக பேசியதாகவும், தனக்கு பாதுகாப்பு அளிக்க கோரியும், அந்த ஊராட்சி பெண் தலைவர் நாகஜோதி எஸ்.பி. யிடம் புகார் கொடுத்தார்.

பெரம்பலூர் போலீஸ் எஸ்.பி பாடாலூர் போலீசாருக்கு புகாரின் மீது விசாரணை நடத்த உத்தரவிட்டிருந்தார். அதன்பேரில், கவுன்சிலர் விஜயபிரபு, ஊராட்சி தலைவர் நாகஜோதி அவரின் கணவர், துணைத் தலைவர், மற்றும் அங்கு நடந்த நிகழ்ச்சிகளை நேரில் பார்த்தவர்களை அழைத்து நேரில் விசாரணை நடத்தினர். அப்போது திடீரென கவுன்சிலர் விஜயபிரபு பெண் தலைவர் நாகஜோதி இடம் நடந்த சம்பவத்திற்கு மன்னிப்பு கேட்டு வருத்தம் தெரிவித்துக் கொண்டார். இதனால் வழக்கை பெண் தலைவர் நாகஜோதி திரும்பப் பெற்றுக்கொண்டு சமாதானமாகி விட்டார்.

பாடாலூர் போலீஸார், அரசியல் கத்துக் குட்டியான கவுன்சிலர் விஜய் பிரபுவுக்கு உரிய அறிவுரை எடுத்து கூறியதுடன் அரசியலில் எப்படி நடந்து கொள்வது என்பதை மூத்த அரசியல்வாதிகளிடம் பாலபாடம் கற்றுக்கொள்ளவும் எடுத்துரைத்தனர். மேலும், பெண் தலைவரின் கணவரும் , இனிமேல் வரும் நாட்களில், ஊராட்சியின் அலுவல்களில் அத்து மீறி தலையிடக்கூடாது, தலைவரின் சேரில் அமரக்கூடாது என்றும், ஊராட்சி பணியாளர்களுக்கு எந்த வித உத்தரவும் பிறப்பிக்க கூடாது என்றும் , ஊராட்சி தலைவர் கிராம மக்களுக்கு வேண்டிய அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க முன்வரவேண்டும், ஊராட்சி தலைவரை மக்கள் தொடர்பு கொள்ள முடியாமல் இருப்பதே இந்த பிரச்சினைக்கு முக்கிய காரணம் என்றும், கிராமத் தலைவர் பொது மக்கள் அணுகும் விதத்தில் இருக்க வேண்டும், கணவர் தலைவரா, மனைவி தலைவரா என பொதுமக்களுக்கு சந்தேகம் வரக்கூடாது என்றும், அறிவுரை கூறி இரு தரப்பினரிடமும் சமாதானக் கடிதம் எழுதி வாங்கிக் கொண்டு அனுப்பி வைத்தனர்.

பொதுவாக, நீதிபதி, கலெக்டர், காவல் துறை, மருத்துவத்துறை, வருவாய்த்துறை அதிகாரிகளாகவோ, அலுவலர்களாகவோ, ஆசிரியர்களாகவோ, பெண்கள் பணிக்கு வரும் போது அவர்களது, கணவர்களுக்கு தனி இருக்கை மனைவியின் நாற்காலிக்கு அருகில் போடப்படுவதில்லை. ஆனால், பெண்கள், ஊராட்சித் தலைவர், ஒன்றியத் தலைவர், மாவட்ட ஊராட்சித் தலைவர், எம்.எல்.ஏ., எம்.பி போன்றோர் அரசியல் பதவிகளுக்கு வரும் போது மட்டும் பெண் தலைவர்களின் அருகில் கணவர்களுக்கும் சிறப்பு இருக்கை அமைக்கப்படுவதோடு பெண் தலைவர்களை யார் நேரில் தொடர்பு கொள்ள முடிவதில்லை.

பெண்களுக்கு இடஒதுக்கீடு வழங்கப்டுவதே அவர்களும் பாலின ரீதியாக வேறுபாடு இல்லாமல், தன்னியச்சையாக இயங்குவதோடு , சமத்துவம் மற்றும் சமஉரிமைகளை பெற வேண்டிய நோக்கத்தையே அவர்களின் கணவர்கள் நிழல் தலைவர்களாக பின்னுக்கு தள்ளி விடுகின்றனர்.

தற்போது பாஜக வில் சேர்ந்துள்ள குஷ்பு-வின் கணவர் சுந்தர்.சியை முன்னுதாரணமாக எடுத்து கொண்டு பெண்களுக்கும் சமத்துவம் வழங்க, உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகளின் கணவர்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்பதே அனைத்து தரப்பினரின் எதிர்பார்ப்பாக உள்ளது.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!