Amma Mini Clinic, Thenur Village, Perambalur District; The Collector opened it in the presence of the MLAs.
பெரம்பலூர் மாவட்டம் தேனூர் கிராமத்தில் முதலமைச்சரின் அம்மா மினி கிளினிக்கை எம்.எல்.ஏக்கள் ஆர்.டி.இராமச்சந்திரன், பெரம்பலூர் எம்.எல்.ஏ தமிழ்ச்செல்வன் ஆகியோர் முன்னிலையில் கலெக்டர் ஸ்ரீவெங்கட பிரியா திறந்து வைத்தார்.
பெரம்பலூர் மாவட்டத்தில் 28 அரசு ஆரம்ப சுகாதார நிலையம், 3 வட்டார அரசு மருத்துவமனை, மாவட்ட தலைமை மருத்துவமனை மற்றும் 12 நடமாடும் மருத்துவ வாகனம் செயல்பட்டு வருகிறது. பெரம்பலூர் மாவட்டத்தில் 16 அம்மா மினி கிளினிக்குகள் தொடங்கப்பட உள்ளது. அதில் முதல்கட்டமாக பெரம்பலூர் சட்டமன்ற தொகுதியில் தேனூர், தொண்டமாந்துறை, மேலப்புலியூர் ஆகிய 3 இடங்களிலும், குன்னம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பரவாய், ஓகளூர், கீழப்புலியூர் ஆகிய 3 இடங்கள் என மொத்தம் 6 இடங்களில் தொடங்கப்படுகிறது. முதலமைச்சரின் அம்மா மினி கிளினிக் ஆனது காலை 8 மணி முதல் மதியம் 12 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் 7 மணி வரையிலும் செயல்படும். வாரத்தில் சனிக்கிழமை மட்டும் விடுமறை, மற்ற அனைத்து நாட்களிலும் மினி கிளினிக் செயல்படும். கிளினிக்குகளில் 1 மருத்துவர், 1 செவிலியர், 1 பணியாளர் ஆகியோர் பணிபுரிய உள்ளனர்.
மருத்துவமனையில் புற நோயாளிகள் சிகிச்சை, சிறு நோய்களுக்கு சிகிச்சை, குடுமப கட்டுப்பாடு சேவை, பேறுகால முன் கவனிப்பு, பின் கவனிப்பு, முதல் உதவி மற்றும் அவசர சிகிச்சை, நாய்கடிக்கான தடுப்பூசி, டிடி தடுப்பூசி, இரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை நோய் சிகிச்சை, ஈ.சி.ஜி. பரிசோதனை மற்றும் சிறுநீர் சோதனை (சர்க்கரை புரதம்), மலேரியா இரத்த தடவல் சோதனை, இரத்த சோகை பரிசோதனை, கருத்தரித்தல் கண்டறிதல் சோதனை, இரத்த சர்க்கரை பரிசோதனை போன்றவை மேற்கொள்ளப்படும்.
இந்த மினி கிளினிக் மூலம் தேனூர், கே.கண்ணப்பாடி, தொட்டியப்பாடி, மாவிலங்கை மற்றும் நத்தக்காடு கிராமங்களை சேர்ந்த 7 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் பயனடைவார்கள். தங்களது உடலில் என்ன நோய் இருக்கிறது என்பது தெரியாமல் இருக்கின்ற பொதுமக்கள் இம்மருத்துவமனையில் பரிசோதனை செய்து கொள்ளலாம்.
ஏதேனும் மேல் சிகிச்சை தேவைபடும் நபர்களுக்கு மருத்துவமனையின் மூலம் சிகிச்சைக்காக மாவட்ட தலைநகர மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள். தமிழக அரசால் பொதுமக்களின் நலன் கருதி செயல்படுத்தப்பட்டுள்ள இந்த மருத்துவ சேவையினை நல்ல முறையில் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் சுகாதார பணிகள் துணை இயக்குநர் எம்.கீதாராணி, மாவட்ட மலேரியா அலுவலர் சுப்பிரமணியம், உதவி திட்ட மேலாளர் சுகாதார பணிகள் கலைமணி, வட்டார மருத்துவ அலுவலர் மகாலட்சுமி, ஊராட்சித் தலைவர் ஜெயசுதா, தேனூர் பிரமுகர்கள் வக்கீல் வாசுதேவன், சிவராமன், பாடாலூர் முன்னாள் ஊராட்சி தலைவர் வேல்முருகன், அதிமுக கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள், கர்ப்பிபெண்கள், பொதுமக்கள் பலர் திரளாக கலந்து கொண்டனர்.
படவிளக்கம்:
பெரம்பலூர் மாவட்டம் தேனூரில், எம்.எல்.ஏக்கள் ஆர்.டி.ராமச்சந்திரன் (குன்னம்), ஆர்.தமிழ்ச்செல்வன் (பெரம்பலூர்) ஆகியோர் முன்னிலையில், அம்மா மினி கிளினிக்கை திறந்து வைத்த கலெக்டர் ஸ்ரீவெங்கடபிரியா தாய்மார்களுக்கு அம்மா குழந்தை நல பரிசு பெட்டகத்தை வழங்கிய போது எடுத்தப்படம். அருகில் சுகாதார பணிகள் துணை இயக்குநர் எம்.கீதாராணி, ஊராட்சித் தலைவர் ஜெயசுதா உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.