Birth and death registration certificates can be downloaded from the website: Perambalur Collector Santha Info.

பெரம்பலூர் கலெக்டர் சாந்தா விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:

தமிழகத்தில் பிறப்பு, இறப்பு பதிவு செய்திட ஒரே மென்பொருள் அறிமுகப்படுத்தப்பட்டு 01.01.2018 முதல் நகராட்சி, பேரூராட்சி, பொது சுகாதாரம், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை ஆகிய அனைத்து துறைகளும் ஒரே பொதுவான மென்பொருள் மூலம் பிறப்பு, இறப்புகள் பதிவு செய்யப்பட்டு சான்றிதழ் வழங்கப்படுகிறது.

அரசு மருத்துவமனைகள், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், தனியார் மருத்துவமனைகளில் நிகழும் பிறப்புகள், இறப்புகள், குழந்தை இறப்புகள் மற்றும் வீடுகளில் நிகழும் நிகழ்வுகள் ஆகியன ஒரே மென்பொருள் http://crstn.org என்ற இணையதளத்தில் அந்தந்த பகுதிக்கான பிறப்பு, இறப்பு பதிவாளரால் பதிவு செய்யப்பட்டு வருகிறது.

பொதுமக்கள் 01.01.2018 முதல் பதிவு செய்யப்பட்ட நிகழ்வுகளின் சான்றிதழ்களை http://crstn.org என்ற இணையதளம் மூலம் இலவசமாக எங்கு வேண்டுமானாலும் தேவைப்படும் நகல்களை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். பிறப்பு சான்றிதழ் பதிவிறக்கம் செய்ய கர்ப்பினி தாய்மார்களுக்கு கர்ப்ப பதிவின்போது வழங்கப்படும் 133 என ஆரம்பிக்கும் 12 இலக்க எண்ணை உள்ளீடு செய்து தொலைபேசி எண்ணிற்கு வரும் OTP உள்ளீடு செய்தால் பிறப்பு சான்றிதழ் பார்க்க இயலும். கர்ப்ப பதிவு எண் இல்லை எனில் பாலினம், மாவட்டம், மருத்துவமனையின் பெயர், பிறந்த தேதி, தொலைபேசி எண், தொலைபேசி எண்ணிற்கு வரும் OTP ஆகியவற்றை உள்ளீடு செய்து சான்றிதழை பார்த்து, தேவைப்படும் எண்ணிக்கையில் நகல் எடுத்துக்கொள்ளலாம். இறப்பு சான்றிதழுக்கும் பாலினம், மாவட்டம், இறந்த இடம், இறந்த தேதி, தொலைபேசி எண், தொலைபேசி எண்ணிற்கு வரும் OTP ஆகியவற்றை உள்ளீடு செய்து சான்றிதழை பார்த்துக்கொள்ளலாம், நகல் எடுத்துக்கொள்ளலாம். கைபேசி வாயிலாகவும், இணையதள முகவரியில் சென்று தகவல்களை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.

அரசு மருத்துவமனை, அரசு ஆரம்ப சுகாதார நிலையம், நகராட்சி, பேரூராட்சிகளில் பதிவு செய்யப்படும் நிகழ்வுகளின் சான்றிதழ்கள் மின்னனு கையொப்பம் (e-sign) செய்யப்பட்டு குறியீட்டுடன் சான்றிதழ்கள் உருவாக்கம் செய்யப்படும். கிராம நிர்வாக அலுவலரால் பதிவு செய்யப்படும் பிறப்பு இறப்பு நிகழ்வுகளின் சான்றிதழ்களில் பிறப்பு இறப்பு பதிவாளரின் கையொப்பத்துடன் வரும். அனைத்து சான்றிதழ்களிலும் QR CODE உருவாக்கம் செய்யப்படும். இவ்வகைச் சான்றிதழ்களின் உண்மைத் தன்மையினை அதில் அச்சிடப்பட்டுள்ள QR ஸ்கேனிங் மூலம் உறுதி செய்துகொள்ளலாம்.

01.01.2018-க்கு முன் நடந்த நிகழ்வுகளின் சான்றுகளை பதிவேடுகள் கட்டுப்பாட்டில் உள்ள வட்டாட்சியர் மற்றும் சார்பதிவாளரிடம் விண்ணப்பம் செய்து ஒரு நகலுக்கு ரூ.200- அரசு கணக்கில் செலுத்தி சான்றுகள் பெற்றுக்கொள்ளலாம். பொதுமக்களுக்கு பிறப்பு இறப்பு சான்றுகள் பெறுவது குறித்து விழிப்புணர்வு அவ்வப்போது மாவட்ட நிர்வாகத்தின் மூலம் ஏற்படுத்தப்பட்டு வருகிறது. எனவே பெரம்பலூர் மாவட்ட பொதுமக்கள் தங்களுக்கு தேவையான சான்றிதழ்களை இணையதளத்தின் வாயிலாக பதிவிறக்கம் செய்து பயன்பெறலாம், என அதில் தெரிவித்துள்ளார்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News Today - Kalaimalar.

error: Content is protected !!