Candidates can file nominations for Perambalur and Kunnam Assembly constituencies from March 12: Collector Venkatapriya
சட்டமன்ற பொதுத் தேர்தல் 2021ல் போட்டியிட விரும்பும் வேட்பாளர்கள் வரும் மார்ச்.12 முதல் வேட்புமனு தாக்கல் செய்யலாம் என மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரும், கலெக்டருமான வெங்கடபிரியா தெரிவித்துள்ளார்.
இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, தமிழ்நாடு சட்டமன்ற பொதுத் தேர்தல் 2021 எதிர்வரும் ஏப்.6 அன்று நடைபெறுவதை முன்னிட்டு வேட்புமனு தாக்கலின்போது, அரசியல் கட்சி மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் தேர்தல் ஆணைய விதிமுறைகளை முறையாக கடைபிடிக்க வேண்டும்.
தேர்தலில் போட்டியிட விரும்பும் வேட்பாளர்கள் 12.03.2021 அன்று காலை முதல் 19.03.2021 அன்று முடிய காலை 11.00 மணி முதல் 03.00 மணி வரை வேட்பு மனுக்களை தாக்கல் செய்யலாம். இதில் 13.03.2021 மற்றும் 14.03.2021 ஆகிய இரு நாட்கள் விடுமுறை நாட்கள் ஆகும். காலை 11.00 மணிக்கு முன்பாகவோ பிற்பகல் 03.00 மணிக்கு பின்போ வேட்புமனுக்கள் பெறப்படமாட்டாது. வேட்புமனுவினை தேர்தல் நடத்தும் அலுவலர் அல்லது முதன்மை உதவி தேர்தல் நடத்தும் அலுவலரிடம் மட்டுமே வேட்புமனு வழங்கப்பட வேண்டும். வேட்புமனு விண்ணப்பத்தினை சம்மந்தப்பட்ட தேர்தல் நடத்தும் அலுவலகத்தில் இலவசமாக பெற்றுக் கொள்ளலாம்.
பெரம்பலூர் சட்டமன்ற தொகுதிக்கு வேட்புமனு தாக்கல் செய்ய விரும்புபவர்கள் சார் ஆட்சியர் அலுவலகத்தில், பெரம்பலூர் சட்டமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் அல்லது முதன்மை உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்களிடமும் வழங்கலாம்.
குன்னம் சட்டமன்ற தொகுதிக்கு வேட்புமனு தாக்கல் செய்ய விரும்புபவர்கள் குன்னம் வட்டாட்சியர் அலுவலகத்தில் குன்னம் சட்டமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் அல்லது முதன்மை உதவி தேர்தல் நடத்தும் அலுவலரிடமும் வழங்கலாம்.
வேட்புமனுவினை வேட்பாளரோ அல்லது அவரை முன் மொழிபவர்கள் மட்டுமே தாக்கல் செய்ய வேண்டும். வேட்புமனு பெறப்படும் அலுவலக 100 மீட்டர் சுற்றளவிற்கு அதிகபட்சமாக இரண்டு வாகனம் மட்டுமே வர வேண்டும். வேட்புமனு தாக்கலின்போது தேர்தல் நடத்தும் அலுவலர் அறையில் வேட்பாளருடன் 2 நபர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள்.
அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி வேட்பாளராக இருந்தால் 1 நபர் முன்மொழிந்தால் போதுமானது. பதிவு செய்யப்பட்ட கட்சிகள் அல்லது சுயேட்சை வேட்பாளராக இருந்தால் 10 நபர்கள் முன்மொழிதல் வேண்டும். அவ்வாறு முன்மொழிபவர்கள் சம்மந்தப்பட்ட சட்டமன்ற தொகுதியைச் சேர்ந்தவராக இருக்க வேண்டும். ஒரு வேட்பாளர் அதிகபட்சமாக 4 வேட்பு மனுக்களை தாக்கல் செய்யலாம். தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் வைப்புத் தொகையாக பொதுபிரிவினர் ரூ.10 ஆயிரமும், தாழ்த்தப்பட்ட மற்றும் மலைவாழ் மக்கள் பிரிவினைச் சேர்ந்தவர்கள் (சாதிச்சான்றிதழுடன்) ரூ.5,000மும் பணமாக மட்டுமே செலுத்த வேண்டும்.
வைப்புத்தொகைக்கான ஒப்புதல் சீட்டு வழங்கப்படும். வேட்புமனு தாக்கல் செய்பவர்கள் படிவம் 26ல் அனைத்து கலங்களும் பூர்த்தி செய்யப்பட வேண்டும். பத்திரத்தில் கைகளாலோ அல்லது தட்டச்சோ செய்யப்படலாம். அனைத்து பக்கங்களிலும் கையொப்பமிட்டிருக்க வேண்டும். பத்திரத்தில் ரூ.20 முத்திரைத்தாள் அளிக்க வேண்டும்.
வேட்பாளர் பிற சட்டமன்ற தொகுதி வாக்காளராக இருக்கும்பட்சத்தில் சம்மந்தப்பட்ட வாக்காளர் பதிவு அலுவலர்களிடம் சான்று பெற்றிருக்க வேண்டும். வேட்பு மனுவுடன் அதிகபட்சமாக 3 மாதத்திற்குள் எடுக்கப்பட்ட 3 ஸ்டாம்ப் சைஸ் புகைப்படமும், 3 பாஸ்போர்;ட் சைஸ் புகைப்படமும் இணைக்க வேண்டும். வாக்குச் சீட்டில் வேட்பாளரின் பெயர் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் எவ்வாறு இடம்பெற வேண்டும் என்பதனை வேட்பாளரே எழுதி தர வேண்டும்.
வேட்புமனு தாக்கல் செய்பவர்கள் வேட்புமனு தாக்கலுக்கு மூன்று நாட்களுக்கு முன்பாக தேர்தல் செலவினங்களை மேற்கொள்ள ஏதுவாக தனியாக ஒரு வங்கி கணக்கினை துவக்கியிருக்க வேண்டும். வேட்புமனுக்கள் தாக்கலின் அனைத்து நிகழ்வுகளும் வீடியோ மூலம் ஒளிப்பதிவு செய்யப்படும் என தேர்தல் ஆணையம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.