Chief Minister Jayalalithaa, who died in the news issued perambalur shops hastily shut.
தமிழக முதல்வரும், அ.தி.மு.க. பொதுச்செயலாளருமான ஜெயலலிதா கடந்த செப்டம்பர் மாதம் 22ம் தேதி உடல்நலக்குறைவால் அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
தொடர்ந்து அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். இந்நிலையில் நேற்று இரவு முதல் ஜெயலலிதாவின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக அப்பல்லோ மருத்துவமனை தெரிவித்தது.
இந்நிலையில் முதல்வர் ஜெயலலிதா காலமானதாக இன்று மாலை அறிவிக்கப்பட்டது. இதனால் தமிழகம் முழுவதும் உள்ள அதிமுக தொண்டர்களும் பொதுமக்களும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
தொலைக்காட்சிகளில் செய்தியைக் கேட்ட சிலர் கதறி அழுதனர். முதல்வர் காலமான செய்தியால் மக்களிடையே பரபரப்பு தொற்றிக் கொண்டது. இதையடுத்து பெரம்பலூர் நகரில் முக்கிய வீதிகள் அனைத்திலும் உள்ள பெரும்பாலான கடைகள் உடனடியாக அடைக்கப்பட்டது.
நகரில் உள்ள புதிய பேருந்து நிலையம், பழைய பேருந்து நிலையம், காமராஜர் வளைவு, கடைவீதி பஜார் வீதிகளில் ஜவுளிக் கடைகள், நகைக் கடைகளில் மக்கள் இருந்தால் அரை ஷட்டரை மட்டும் பூட்டியவாறு வியாபாரம் நடந்தது.
கொஞ்சம் கொஞ்சமாக மக்கள் வெளியேறிய பின்னர் ஊழியர்களை வீட்டிற்கு அனுப்பிவிட்டு கடைகள் மூடப்பட்டன. முக்கிய இடங்களில் போலீசார் பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். நகரில் வாகன போக்குவரத்து அதிகரித்துள்ளது. மக்கள் தங்களது வீடுகளை நோக்கி விரைந்த வண்ணம் உள்ளனர்.