Collector of Perambalur requests the public to abandon the superstition of isolating women during menstruation!

Collector of Perambalur requests the public to abandon the superstition of isolating women during menstruation!

பெரம்பலூர் மாவட்டம், இனாம் அகரம் ஊராட்சியில், மாதவிடாய் காலங்களில் பெண்கள் தனி கட்டிடத்தில் தனிமைப்படுத்தப்படுவதாக கடந்த 20 ஆண்டுகளாக செய்திகள் நாளேடுகளில் பிரசுரிக்கப்பட்ட நிலையில், ஆங்கில நாளிதழான The Hindu வில் வந்த செய்தியின் அடிப்படையில் பெரம்பலூர் கலெக்டர் இன்று நேரில் அந்த கிராமத்திற் அதிகாரிகளுடன் சென்று பார்வையிட்டார்.

மாதவிடாய் காலங்களில் பெண்கள் தனிமைப்படுத்துவதாக கூறப்படும் கட்டிடத்தை பார்வையிட்ட கலெக்டர், பின்னர் பொதுமக்களிடம் தெரிவித்ததாவது:

இனாம் அகரம் ஊராட்சியில் 423 குடும்பங்களைச் சேர்ந்த 1,466 நபர்கள் இருக்கின்றீர்கள். உங்கள் ஊராட்சியில் அரசு துணை சுகாதார நிலையம், குடிநீர் வசதிக்காக மூன்று மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள், நூலகம், குழந்தைகள் மையம், தொடக்கப் பள்ளி என அனைத்து வசதிகளும் உள்ளது. இன்று உங்களைத் தேடி மாவட்ட நிர்வாகத்தின் குறிப்பாக சுகாதாரத்துறை துணை இயக்குநர், ஊராட்சிகளுக்கான உதவி இயக்குநர் என பல்வேறு துறை அலுவலர்கள் வருகை தந்துள்ளோம்.

நமது இனாம் அகரம் ஊராட்சியில் மாதவிடாய் காலங்களில் பெண்கள் தனிமைப்படுத்தப்படும் பழக்கம் இருந்து வருவதாக அறிகிறோம். மாதவிடாய் காலங்களில் பெண்கள் சுகாதாரமாக இருக்க வேண்டும். நோய் தொற்று ஏற்படாத வகையில் தங்களை பாதுகாத்துக்கொள்ள வேண்டும்.

தமிழக அரசு பள்ளி மற்றும் கல்லூரி படிக்கும் மாணவிகளுக்கு இலவசமாக நாப்கின் வழங்கி வருகிறது. மேலும் அங்கன்வாடி மையங்கள், சுகாதார வளாகங்கள், ஆரம்ப சுகாதார மையங்களிலும் நாப்கின் வழங்கப்பட்டு வருகிறது. மேலும் கிராம சுகாதார செவிலியர்களிடம் பெற்றுக் கொள்ளும் வகையிலும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. பள்ளிகளில் இரண்டு மாதத்திற்கு மூன்று பாக்கெட்டுகள் வழங்கி வருகிறார்கள். ஒரு பாக்கெட்டில் ஆறு நாப்கின்கள் உள்ளன. இந்த நாப்கின்களை உங்களைப் போன்ற பெண்கள் தான் தயார் செய்து கொடுக்கிறார்கள். நோய் தொற்று ஏற்படாமல் இருக்க வேண்டும் என்ற ஒரே ஒரு காரணத்திற்காகவே அரசால் இலவசமாக நாப்கின்கள் கொடுக்கப்படுகிறது.

பெண்கள் மாதவிடாய் காலங்களில் சுகாதாரமாக இருந்தால்தான் அவர்களுடைய கர்ப்பப்பை உள்ளிட்ட உறுப்புகள் நோய் தொற்று ஏற்படாமல் இருக்கும். அவ்வாறு சுகாதாரமாக இல்லாத பெண்களுக்கு நோய் தொற்று ஏற்பட்டு, அவர்களுடைய உடல் நலம் பாதிக்கப்படுகிறது.

நோய்த்தொற்று ஏற்பட்டால் பெண்கள் கருவுறுதலில் பல்வேறு சிக்கல்கள் ஏற்படும், உடல் உபாதைகள் பல உருவாகும், உடல் ஆரோக்கியம் குறையும் என மருத்துவ வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். உங்கள் உறவினர்களுக்கு தொற்று ஏற்பட நீங்களே காரணமாக இருக்கலாமா?. இன்றைய நவீன காலத்தில் ஆண்களுக்கு நிகராக பல்வேறு துறைகளில் பெண்கள் சாதனை படைத்து வருகின்றார்கள்.

ஒரு வீட்டில் அனைவரின் நலனையும் பாதுகாக்கும் பெண்களின் நலம் மிகவும் முக்கியம். எனவே, ஊர் மக்கள் தயவுகூர்ந்து மாதவிடாய் காலங்களில் பெண்களை பொது இடத்தில் தனிமைப்படுத்தும் பழக்கத்தை கைவிட வேண்டும். பெரும்பான்மையாக வீடுகளில் தனிநபர் கழிப்பிடம் உள்ளது. மாதவிடாய் காலத்தில் பெண்களை உங்கள் வீடுகளிலேயே வைத்துக் கொள்ள முன்வர வேண்டும்.

மாதவிடாய் காலத்தில் பெண்கள் சுகாதாரமாக இல்லாமல் இருந்தால் அவர்களுக்கு தொற்று ஏற்பட அதிக வாய்ப்புகள் உள்ளது. அப்படி தொற்று ஏற்படும்போது அது பெண்கள் கருத்தரித்தலையும், குழந்தை பேற்றையும் பாதிக்கும் நிலை ஏற்படும். கிராமப்புற பெண்களின் சுகாதாரத்தை மேம்படுத்த கிராம சுகாதார செவிலியர்கள் உங்கள் வீட்டில் உள்ள வளரிளம் பெண்கள் மற்றும் கர்ப்பிணி தாய்மார்களை நேரில் சந்தித்து அவர்களுக்கு சத்து மாவு, விட்டமின் மாத்திரைகள் வழங்கப்பட்டு வருகின்றது .உங்கள் சுகாதாரத்தையும், உடல் ஆரோக்கியத்தையும் பேணுவதற்காக அரசு பல முயற்சிகளை செய்து வருகின்றது. உங்கள் குழந்தைகளின், உறவினர்களின் நலன் கருதி நீங்கள் ஒரு அடி எடுத்து வையுங்கள்.

எனவே பொதுமக்கள் சுகாதாரமாக இருக்க வேண்டும். மகளிர் சுகாதார வளாகங்கள், தனிநபர் கழிப்பறைகள், குடிநீர் வசதிகள், கழிவுநீர் கால்வாய்கள் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் என உங்களின் கோரிக்கை எதுவாக இருந்தாலும் மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க தயாராக உள்ளது. அதே நேரத்தில், மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் இப்பகுதி கிராம மக்களிடம் எதிர்பார்ப்பது என்னவென்றால் மூடநம்பிக்கைகளை களைந்து பெண்களுக்கான உடல்நலன் மற்றும் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, மாதவிடாய் காலங்களில் பெண்களை பொது இடங்களில் தங்க வைக்கப்படுவதை கைவிட வேண்டும், என தெரிவித்தார்.

இந்நிகழ்வில் துணை இயக்குநர் சுகாதார பணிகள் செந்தில் குமார், ஊராட்சிகள் உதவி இயக்குநர் கணபதி, சுகாதார உதவி திட்ட மேலாளர் கலைமணி, வட்டார மருத்துவ அலுவலர் பிரேம்குமார், வருவாய் மற்றும் மருத்துவ அலுவலர்கள், கிராம, பகுதி, சமுதாய சுகாதார செவிலியர்கள் தன்னார்வல தொண்டு நிறுவன பணியாளர்கள் உள்ளிட்டோர் பலர் கலந்து கொண்டனர்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News Today - Kalaimalar.

error: Content is protected !!