Collector Srivengada Priya inspects corona virus and dengue control measures in Perambalur
பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் உள்ள கொரோனா வைரஸ் சிகிச்சை மையத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் சிகிச்சை முறைகளையும் மற்றும் தடுப்பு நடவடிக்கைகளையும், பெரம்பலூர் நகராட்சியின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் டெங்கு கொசு ஒழிப்பு பணிகளையும் கலெக்டர் ஸ்ரீவெங்கட பிரியாநேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் கொரோனா நோயாளிகளுக்கென அமைக்கப்பட்டுள்ள சிறப்பு வார்டுகளையும், கொரோனா நோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சை முறைகளையும் உட்கட்டமைப்பு வசதிகளையும், ஆய்வகம், பரிசோதனை செய்யும் முறைகள் ஆகியவற்றை அரசு மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களிடம் கேட்டறிந்த அவர், மேலும் அரசு மருத்துவமனை சரியான முறையில் குறித்த நேரத்திற்கு சுத்தம் செய்யப்படுகிறதா, சானிடைசர் தெளிக்கப்படுகிறதா, நோயாளிகளுக்கு குறித்த நேரத்தில் உணவு வழங்கப்படுகிறதா, குடிநீர் வசதி, கழிப்பறை வசதிகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் முறையாக பராமரிக்கப்படுகிறதா என்பது குறித்தும் ஆய்வு மேற்கொண்டார்.
அதனைத் தொடர்ந்து பழைய பேருந்து நிலையத்தில் தீபாவளி பண்டிகையையொட்டி மக்கள் அதிகம் கூடும் இடங்களில் நகராட்சி மூலம் அமைக்கப்பட்டுள்ள நோய் பரிசோதனை செய்யும் மையங்களை பார்வையிட்டார்கள். பேருந்து நிலையத்திலிருந்த பொதுமக்களிடம் கண்டிப்பாக முகக்கவசம் அணிய வேண்டும் எனவும், அடிக்கடி கைகளை சுத்தமாக கழுவ வேண்டும் எனவும், தனிநபர் இடைவெளியினை கண்டிப்பாக அனைவரும் கடைபிடிக்க வேண்டும் எனவும், பொதுஇடங்களில் எச்சில் துப்பக்கூடாது எனவும் தெரிவித்தார்கள். மேலும் அங்கிருந்த ஒரு பேருந்தில் ஏறி அந்த பேருந்தில் அமர்ந்திருந்த முகக்கவசம் அணியாத பயணிகளுக்கு முகக்கவசம் வழங்கியதோடு இனி வரும் காலங்களில் கண்டிப்பாக முகக்கவசம் அணியாமல் வெளியே வரக்கூடாது எனவும், தனிநபர் இடைவெளியினை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தினார்.
தற்போது மழைக்காலம் என்பதால் டெங்கு கொசுக்கள் உருவாவதை தடுக்கும் விதத்தில் நகராட்சிக்குட்பட்ட குடியிருப்பு பகுதிகளில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு மேற்கொண்டு, பொதுமக்களிடம் வீட்டின் சுற்றுப்புறத்தில், பிளாஸ்டிக் மற்றும் உடைந்த குடம், தேங்காய் சிரட்டைகள், பிளாஸ்டிக் வாளியில் மழைநீர் தேங்காவண்ணம் அப்புறப்படுத்த வேண்டும். குளியல் அறையில் உள்ள தொட்டிகளில் டெங்கு லார்வாவாக வளரா வண்ணம் மூன்று நாட்களுக்கு ஒருமுறை பிளிச்சிங் பவுடரால் சுத்தப்படுத்த வேண்டும். வீட்டின் மாடியில் குடிநீர் தொட்டியில், நீர் நிரம்பியவுடன் வெளியேறும் குழாய் மற்றும் வெளியேறும் குழாய்கள் ஆகியவற்றை கொசு வலை மூலம் கட்டி கொசு உட்புகாவண்ணம் செய்தல் வேண்டும் என அறிவுறுத்தினார். மேலும் கொசு ஒழிப்பு பணியாளர்கள் ஒவ்வொரு வீட்டிலும் கொசு புழு ஒழிப்பு பணி மேற்கொள்ளும் பொழுது வீட்டின் உரிமையாளர்களையும், கொசு ஒழிப்பு பணியில் ஈடுபடுத்தி வருங்காலங்களில் அவர்களே தங்களின் வீடுகளில் கொசு புழு உற்பத்தியாகாத வண்ணம் தடுக்க பயிற்சி அளிக்க வேண்டும் என சம்மந்தப்பட்ட துறை அலுவலர;களிடம் அறிவுறுத்தினார்கள்.
அதனைத் தொடர்ந்து புதிய பேருந்து நிலைய பகுதிகளில் டெங்கு கொசுக்கள் உண்டாகாமல் தடுக்கும் விதமாக ரூ.5.6இலட்சம் மதிப்பீட்டில் வாங்கப்பட்ட கொசு மருந்து தெளிப்பு இயந்திரத்தின் மூலம் நடைபெற்று வரும் கொசு புழுக்கள் ஒழிப்பு நடவடிக்கையினை மாவட்ட ஆட்சித் தலைவர் ஸ்ரீவெங்கட பிரியா நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்து மாவட்டத்தில் உள்ள அனைத்து பகுதிகளிலும் டெங்கு கொசு புழுக்கள் உருவாகாத வண்ணம் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
பின்னர், செய்தியாளர்களிடம் அவர் தெரிவித்ததாவது:
தமிழக அரசு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பொதுமக்கள் பெரிய நிறுவனங்கள் மற்றும் கடைகளில் மொத்தமாக கூடுவதை தடுத்திடவும் முகக்கவசம் மற்றும் தனிநபர் இடைவெளியை கடைபிடித்திடுவதை உறுதி செய்திடவும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்ள உத்தரவிட்டுள்ளது. அதனடிப்படையில் பெரம்பலூர் நகராட்சி பகுதிகள் மற்றும் பொதுமக்கள் கூடும் இடங்களில் ஒலிப்பெருக்கி மூலம் விழ்ப்புணர்வு பிரச்சாரம் மேற்கொள்ளப்படுகிறது.
கொரோனா வைரஸ் தொற்று நோய் பரவலை கட்டுப்படுத்திட பெரம்பலூர் நகராட்சி பகுதிகளில் 10க்கும் மேற்பட்ட இடங்களில் நோய் கண்டறியும் சிறப்பு பரிசோதனை மையங்கள் நடத்தப்படுகிறது. பொதுமக்கள் தங்கள் மற்றும் சுற்றத்தாரின் நலன் மற்றும் பாதுகாப்பு கருதி பொது இடங்களில் முகக்கவசம் அணிந்தும், தனிநபர் இடைவெளியினை பின்பற்றியும், வெளியிடங்களுக்கு சென்று வந்த பின்பு கிருமிநாசினி மற்றும் சோப்பினை பயன்பத்தி கைகளை சுத்தம் செய்த பின்பே கண்,காது மூக்கு போன்ற உடல் உறுப்புகளை தொட வேண்டும். தீபாவளி பண்டிகையினை உடல் ஆரோக்கியத்துடன் கொண்டாடிட பாதுகாப்பு நடைமுறைகளை முறையாக பின்பற்றிட வேண்டும் எனவும் தெரிவித்தார். சுகாதார பணிகள் இணை இயக்குநர் கீதாராணி, நகராட்சி ஆணையர் குமரிமண்ணன், பெரம்பலூர் தாசில்தார் அருளானந்தம், செவிலியர்கள், மருத்துவ பணியாளர்கள் மற்றும் நகராட்சி பணியாளர்கள் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.