Deepavali sweet and savory makers must be licensed: Perambalur Collector Srivenkatapriya
பெரம்பலூர் கலெக்டர் ஸ்ரீவெங்கடபிரியா விடுத்துள அறிவிப்பில் குறிப்பிட்டுள்ளதாவது:
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இனிப்பு மற்றும் கார பண்டங்களுக்கு சீட்டு நடத்துபவர்கள், தற்காலிகமாக திருமண மண்டபங்களில் இனிப்பு தயாரிப்பவர்கள் உட்பட அனைத்து தயாரிப்பாளர்கள் மற்றும் விற்பனையாளர்களும் உணவு பாதுகாப்புத் துறையில் முறையாக பதிவு செய்து உரிமம் பெற்ற பின்னரே பதார்த்தங்கள் தயாரித்து பொதுமக்களுக்கு விநியோகிக்கவேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
இனிப்பு மற்றும் பேக்கரி பொருட்கள் தயாரிப்பவர்கள் தரமான மூலப்பொருட்களை கொண்டு சுகாதாரமான முறையில் தயாரித்து பாதுகாப்பான உணவுப் பொருட்களை மக்களுக்கு வழங்கவேண்டும். மேலும், தரமான எண்ணெய், நெய் பயன்படுத்தவேண்டும். ஒருமுறை பயன்படுத்தப்பட்ட எண்ணெய் மீண்டும் மீண்டும் பயன்படுத்தக்கூடாது. பேக்கிங் செய்யப்பட்ட உணவுப் பொருட்களில் முழு முகவரி, தயாரிப்பாளர் பெயர், தயாரிப்பு தேதி மற்றும் காலாவதி தேதி கட்டாயமாக அச்சிடப்படவேண்டும்.
பேக்கிங் செய்யப்படாத இனிப்பு வகைகளில் ஒரு பதாகை வைத்து அவற்றில் பயன்படுத்தக்கூடிய நாட்கள், தயாரிப்பு தேதி போன்றவைகள் கண்டிப்பாக ஒட்டப்பட்டிருக்க வேண்டும். இனிப்பு மற்றும் காரம் தயாரிப்பில் அங்கீகரிக்கப்பட்ட நிறங்களை 100 பி.பி.எம். அளவிற்கும் குறைவாக உபயோகிக்கவேண்டும். பிளாஸ்டிக் பைகளைக் ) கொண்டு இனிப்புகளை பேக்கிங் செய்யவோ, சேமிக்கவோ கூடாது. 51 மைக்ரானுக்கு மேல் கொண்ட பிளாஸ்டிக் பைகளை மட்டுமே உபயோகப்படுத்தவேண்டும்.
அனைத்து கடைகளிலும் தயாரிப்பு மற்றும் விற்பனையில் ஈடுபடும் அனைவரும் முகக்கவசம் அணிந்திருக்கவேண்டும் மற்றும் நுகர்வோர்கள் அனைவரும் முகக்கவசம் அணிந்து வரவேண்டும் என அறிவுறுத்தவேண்டும். அனைத்து கடைகளிலும் 2 மணி நேரத்திற்கு ஒரு முறை சானிடைசர் கொண்டு சுத்தம் செய்யவேண்டும். ஹோட்டல்களில் பயன்படுத்தப்படும் எண்ணெய்க்கு பதிவேடு பராமரிக்கவேண்டும். பயன்படுத்தப்பட்ட எண்ணெய் பதிவேட்டில் பதியப்பட்டு பராமரிக்கப்பட வேண்டும்.
நுகர்வோர்கள் உணவுப் பொருட்களை வாங்கும்போது அவற்றில் தயாரிப்பு தேதி, காலாவதி தேதி, தயாரிப்பாளர் விவரம் மற்றும் உணவு பாதுகாப்பு
உரிமம் எண் போன்றவற்றை சரிபார்த்து வாங்கவேண்டும். மேலும் உணவு பொருட்களின் தரம் தொடர்பான புகார்களுக்கு உணவு பாதுகாப்புத் துறையின் 9444042322 என்ற வாட்ஸ்ஆப் எண்ணிற்கு புகார் தெரிவிக்கலாம் என அதில் குறிப்பிட்டுள்ளார்.