DMK is playing a double role in the Agriculture Amendment Act: Interview with BJP state president Murugan Perambalur
வேளாண் திருத்த சட்டத்தில் திமுக இரட்டை வேடம் போடுகிறது என பாஜ மாநில தலைவர் முருகன் குற்றச்சாட்டியுள்ளார்.
பெரம்பலூரில் நேற்று நடந்த பாரதிய ஜனதா கட்சியின் அனைத்து மாவட்ட பொருளாளர்களுக்கான ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்ட பின்னர் தலைவர் எல்.முருகன் செய்தியாளர்களிடம் தெரிவித்தாவது: மத்திய அரசு கொண்டு வந்து வேளாண் திருத்த சட்ட மதோவின் நன்மைகள் குறித்து விவசாயிகளிடையே எடுத்துரைப்பதற்காக “விவசாயிகள் நண்பன் மோடி” என்ற தலைப்பில் விவசாயிகள் சந்திப்பு கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது. இந்த சந்திப்பு கூட்டம் 25ம்தேதி வரை நடைபெறவுள்ளது. வரும் 25ம்தேதி முன்னாள் பிரதமர் வாஜ்பாய் பிறந்த தினம் அன்றைய தினத்தை நல்லாட்சி நாளாக கொண்டாடவுள்ளோம்.
தமிழகம் முழுவதும் எங்களது பூத் கமிட்டியின் தலைவர்கள் வீட்டில் கொடியேற்றுவது, பெயர் பலகை வைத்தல் போன்ற பணிகளை மேற்கொள்ளவுள்ளோம். அமைப்பு ரீதியான பூத் கமிட்டியினர் விவசாய திருத்த சட்டத்தின் நன்மைகளை பொதுமக்களிடம் எடுத்து சொல்லும் விதமாக செயல்படுவர்.
திமுக கடந்த 2016ம் ஆண்டு தேர்தல் அறிக்கையில் வேளாண் திருத்த சட்டம் கொண்டுவரப்படும் கூறியுள்ளனர். அதே சட்டத்தை தான் மத்திய அரசு தற்போது கொண்டுவந்துள்ளது. விவசாயிகளுக்கு நன்மை கிடைக்ககூடாது, இரட்டிப்பு வருமானம் கிடைக்ககூடாது, விவசாயிகளின் வாழ்வு மேம்பட கூடாது என்ற காரணத்தினால் திமுக தொடர்ந்து இந்த சட்டத்தை எதிர்த்து வருகிறது. இந்த சட்டத்தில் திமுக இரட்டை வேடம் போடுகிறது.
பிரதமர் சம்மன் நிதி திட்டத்தின் கீழ் தமிழகத்தில் 41 லட்சம் விவசாயிகள் பயன்பெற்று வருகின்றனர். இதனால் விவசாயிகள் தற்கொலை தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் இந்த வேளாண் திருத்த சட்டத்தை தமிழக விவசாயிகள் ஆதரித்து வருகின்றனர்.
திமுக நிர்வாகிகள் தொடர்ந்து இந்துக்களை இழிவு படுத்தி வருகின்றனர். இந்து மதமே இல்லை என்கின்றனர். இதனை திமுக தலைவர் ஸ்டாலின் ரசித்துக்கொண்டுள்ளார். இந்து மதம் என்றே ஒன்று இல்லை, 200 வருடத்திற்கு முன்பு தான் தோன்றியது என தவறான தகவலையும், மற்ற மதத்தையும் இழிவு படுத்தி கூறிவருகின்றனர். இதனால் இந்து மக்களுக்கு முன்பு திமுக தலைவர் ஸ்டாலின் மன்னிப்பு கேட்கவேண்டும். கந்த கஷ்டி கவசம், வேளாண் திருத்த சட்டம் போன்றவற்றில் திமுக இரட்டை வேடம் போடுகிறது.
அதிமுகவுடன் பாரதிய ஜனதா கட்சியின் கூட்டணி தொடரும், முதலமைச்சர் வேட்பாளரை அதிமுக அறிவித்துள்ளது, இது குறித்து எங்களது தேசிய தலைமை அறிவிக்கும். திமுக – காங்கிரஸ் கூட்டணி உறுதி செய்யப்படவில்லை. அந்த கூட்டணி எப்பவேண்டுமானாலும் உடையலாம், ஆனால் எங்களது கூட்டணி உறுதியாக உள்ளது. டீசல், பெட்ரோல் அந்தந்த கம்பெனி முடிவு செய்து விலையை உயர்த்தி வருகிறது. சிலிண்டர் விலை உயர்த்தப்பட்டாலும், அதற்குரிய மானியம் கேஸ் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.
டில்லியில் நடைபெறும் வேளாண் திருத்த சட்டத்திற்கு எதிராக நடைபெறும் போராட்டம் என்பது, மத்திய அரசுக்கு எதிராக திட்டமிடப்பட்டு துண்டிவிடப்பட்ட போராட்டம், அர்பன் நக்சல்ட், தனிநாடு கேட்கும் பிரிவினைவாதிகளால் நடத்தப்படும் போராட்டமாகும். வரும் சட்டசபை தேர்தலில் எங்களது கூட்டணி ஆட்சியை பிடிக்கும் என்றார். பேட்டியின்போது மாவட்ட தலைவர் சந்திரசேகரன், கவுள்பாளையம் ஊராட்சி மன்றத் தலைவர் கலைச்செல்வன், உதயம் சேகர், உள்ளிட்ட கட்சி .பிரமுகர்கள் பலர் உடனிருந்தனர்.