Do not give up the wealth of education, will not return with age, RT Ramachandran MLA at the ceremony of providing free bicycles

பெரம்பலூர் அரசு மேல்நிலைப்பள்ளியில், பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த 4632 அரசு பள்ளி மாணவ மாணவியர்களுக்கு ரூ. 1 கோடியே 83 லட்ச மதிப்பில், அரசின் விலையில்லா சைக்கிள் வழங்கும் விழா கலெக்டர் ஸ்ரீவெங்கடபிரியா தலைமையில் எம்.எல்.ஏக்கள் ஆர்.டி.ராமசந்திரன் (குன்னம்), ஆர்.தமிழ்ச்செல்வன் (பெரம்பலூர்) ஆகியோர் முன்னிலையில் நடந்தது. அதில் கலந்து கொண்ட எம்.எல்.ஏ ஆர்.டி. ராமச்சந்திரன் பேசியதாவது:

இந்த கல்விச் செல்வத்தை பெற்றுவிடுங்கள். தற்போது விட்டுவிட்டால் என்னை போன்று பின்னால் ஒவ்வொரு நாளும் படிக்க முடியாமல் போய் விட்டாதே என எண்ணி எண்ணி வருந்த நேரிடும். இன்று நீங்கள் இந்த வயதில் விளையாட்டாக செய்யும் ஒவ்வொரு கவனக்குறைவும் பின் நாளில் வருந்த செய்யும். நான் படிக்கும் வயதில் படிப்பை தவறவிட்டுவிட்டேன். என்னிடம் எல்லா செல்வங்களும் உள்ளது. ஆனால், கல்விச் செல்வம் போதிய அளவு இல்லை. அதை எண்ணி எண்ணி வருந்துகிறேன். என்னை போன்று எல்லோருக்கும் ஒரு வாய்ப்பு கிடைக்காது. கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பு உள்ளதை போன்ற நிலை தற்போது இல்லை. அரசு பள்ளி மாணவர்கள் முன்னேற காமாராஜர் பணியை தொடர்ந்து அம்மா ஆட்சியில் மடிக்கணினி, சைக்கிள், புத்தகங்கள், சீருடைகள், மருத்துவப்படிப்பில் உள் ஒதுக்கீடு என பல்வேறு சலுகைகள், பயிற்சி வகுப்புகள் தற்போது வழங்கப்படுகின்றன. மேடையில் அமர்ந்து இருக்கும் கலெக்டர், பெரம்பலூர் எம்.எல்.ஏ தமிழ்ச்செல்வன் ஆகியோர் அரசு பள்ளிகளில் படித்தவர்தான். நமது பெரம்பலூர் எம்.எல்.ஏ தமிழ்ச்செல்வன் இதே பள்ளியில் படித்து எம்.ஏ படித்து எம்.எல்.ஏ ஆகியுள்ளார். நான் தனியார் பள்ளியில் படித்தேன். பள்ளிப்படிப்பை முடிக்க முடியவில்லை. எங்கு படித்தாலும் படிப்பு ஒன்றுதான். மனம்தான் காரணம். அன்று நான், கவனக்குறைவாகவும், விளையாட்டாகவும், படிக்காமல் விட்டதற்கு இன்று வருந்துகிறேன். இன்று என்னால் படிக்க முடியாது. எத்தனை செல்வம் இருந்தாலும் கல்விச் செல்வத்திற்கு ஈடாகாது. எனவே, பள்ளி மாணவர்களாகிய நீங்கள் இந்த வயதில் படித்து, நாட்டையும், வீட்டையும் காக்க வேண்டும் என பேசினார். சமூக இடைவெளி கடைபிடித்து, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மதிவாணன், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் ரமணகோபால், மாவட்ட கல்வி அலுவலர்கள் குழந்தைராசன், மாரிமீனாள், மற்றும் தலைமையாசிரியர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் ஆகியோர் பலர் கலந்து கொண்டனர்.

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2025 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!