Educated unemployed youth can apply for government grants; Perambalur Collector Santha Info

பெரம்பலூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் அக்.1 உடன் தொடங்கும் காலாண்டிற்கு படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் அரசின் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் சாந்தா விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

பத்தாம் வகுப்பு தோல்வி, பத்தாம் வகுப்பு தேர்ச்சி மற்றும் அதற்கு மேலான கல்வித் தகுதிகளை பெற்று வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து, பதிவினைத் தொடர்ந்து புதுப்பித்து 30.09.2020 அன்றைய நிலையில் ஐந்தாண்டுகளுக்கு மேலாக வேலைவாய்ப்பின்றி காத்திருக்கும் இளைஞர்களுக்கு தமிழக அரசால் உதவித்தொகை வழங்கப்படுகிறது. மாற்றுத்திறனாளிகளை பொருத்தவரையில் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து ஓராண்டு முடித்திருந்தால் போதுமானது.

இத்திட்டத்தின் கீழ் பயன்பெற மாற்றுத் திறனாளிகளுக்கு வருமான உச்சவரம்பு ஏதும் கிடையாது. ஏனையோருக்கு மனுதாரரின் குடும்ப ஆண்டு வருமானம் ரூ.72 ஆயிரத்திற்கு மிகாமல் இருத்தல் வேண்டும். இந்த உதவித் தொகையினை பெறுவதற்கு தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின மனுதாரர்கள் 30.09.2020 அன்றைய நிலையில் 45 வயதிற்குள்ளும் இதர இனத்தைச் சார்ந்தவர்கள் 40 வயதிற்குள்ளும் இருத்தல் வேண்டும்.

உதவித்தொகை விண்ணப்ப படிவம் பெற விரும்பும் மனுதாரர்கள் தங்களின் வேலைவாய்ப்பு அடையாள அட்டையினை ஆதாரமாக காண்பித்து பெரம்பலூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் விண்ணப்பங்களை இலவசமாக பெற்றுக் கொள்ளலாம். ஏற்கனவே, விண்ணப்பித்து மூன்றாண்டுகள் உதவித்தொகை பெற்றவர்கள் விண்ணப்பிக்க தேவையில்லை.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை மனுதாரர்கள் நவம்பர் 30-ம் தேதி வரை அனைத்து அலுவலக வேலை நாட்களிலும் பெரம்பலூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் இயங்கும் வேலை வாய்ப்பற்றோர் உதவித்தொகை திட்டப் பிரிவில் அனைத்து அசல் கல்விச் சான்றிதழ்கள், வேலைவாய்ப்பு அடையாள அட்டை மற்றும் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிக்கணக்கு புத்தகத்துடன் நேரில் ஆஜராகி சமர்ப்பிக்கலாம்.

மேலும், உதவித்தொகை பெற்றுவரும் பயன்தாரர்கள் விதிமுறைகளுக்குட்பட்டு சுய உறுதிமொழி ஆவணம் சமர்ப்பிக்க செப்டம்பர் 2020 முதல் பிப்ரவரி 2021 வரை ஆறு மாத காலத்திற்கு கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News Today - Kalaimalar.

error: Content is protected !!