Education loan camp in Perambalur: Minister Sivasankar provided Rs. 2.74 crore education loan assistance to students!

பெரம்பலூர் மாவட்ட நிர்வாகம், மாவட்ட முன்னோடி வங்கி மற்றும் அனைத்து வங்கிகள் இணைந்து நடத்திய கல்விக் கடன் முகாமை தமிழ்நாடு போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர், கலெக்டர் ந.மிருணாளினி தலைமையில், பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் ம.பிரபாகரன் முன்னிலையில் தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழக துணை மருத்துவ அறிவியல் கல்லூரி கூட்ட அரங்கில் தொடங்கி வைத்து கடனுதவிகளை வழங்கினார். இம்முகாமில், பல்வேறு பகுதிகளிலிருந்து மாணவ, மாணவிகள் கலந்துகொண்டு கல்விக் கடன் வேண்டி 421 மனுக்கள் வழங்கினர். போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்ததாவது:
மாணவ, மாணவிகளின் உயர்கல்விக்கு பொருளாதாரம் ஒரு தடையாக இருந்துவிடக்கூடாது என்ற உயரிய நோக்கத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் தமிழ்ப்புதல்வன், புதுமைப்பெண் போன்ற பல திட்டங்களை செயல்படுத்தி வருகின்றார். அதன் ஒரு பகுதியாக கல்விக்கடன் முகாம்களை தொடர்ந்து நடத்திடவும் அறிவுறுத்தியுள்ளார். அதனடிப்படையில், பெரம்பலூர் மாவட்டத்தில் பல கட்டங்களாக கல்விக்கடன் முகாம்கள் நடத்தப்பட்டுள்ளது. கடந்த 4 ஆண்டுகளில் மட்டும் 1420 மாணவ, மாணவிகளுக்கு ரூ.52.31கோடி கல்விக்கடன் வழங்கப்பட்டுள்ளது. அதுமட்டுமில்லாது இம்முகாமில் பெறப்பட்ட மனுக்கள் மீது சம்மந்தப்பட்ட வங்கிகள் உரிய பரிசீலனை செய்து மாணவர்களின் உயர்கல்விக்கு வழிவகுக்கும் வகையில் கடனுதவிகளை வழங்கிட வேண்டும் என தெரிவித்தார்.

அதனைத்தொடர்ந்து, இம்முகாமில் தேர்வு செய்யப்பட்ட 36 மாணவ, மாணவிகளுக்கு ரூ.2.74 கோடி மதிப்பீட்டில் கல்வி கடனுக்கான ஆணைகளை போக்குவரத்துத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் வழங்கினார் . பெரம்பலூர் மாவட்ட திமுக பொறுப்பாளர் வீ.ஜெகதீசன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், பெரம்பலூர் ஒன்றிய திமுக செயலாளருமான ராஜ்குமார், வங்கி அதிகாரிகள் உள்ளிட்ட பல்வேறு அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.


Copyright 2015 - © 2026 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 | . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!