
Explosives seized in quarries near in Perambalur the DMK Union secretary! RDO activity
பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டையை அருகே உள்ள கிருஷ்ணாபுரத்தை சேர்ந்தவர் நல்லதம்பி (வயது 50). இவர் வேப்பந்தட்டை தி.மு.க மேற்கு ஒன்றிய செயலாளராக பணியாற்றி வருகிறார்.
இந்நிலையில் நல்லதம்பி வெங்கலம் ஊராட்சியில் உள்ள மலையில் கல்குவாரி ஏலம் எடுத்து நடத்தி வருகிறார்.
இந்த கல்குவாரிக்கான ஒப்பந்த காலம் கடந்த டிசம்பர் மாதம் 26ம் தேதியுடன் முடிவடைந்துள்ளதாக தெரிகிறது.
இந்த கல் குவாரியில் ஒப்பந்த காலம் முடிந்தும் அங்கு கல் உடைக்கும் பணி நடந்ததாக கூறப்படுகிறது.
இந்த தகவல் பெரம்பலூர் வருவாய் கோட்டாட்சியர் விஸ்வநாதனுக்கு கிடைத்ததை அடுத்து அவர் வெங்கலம் ஊராட்சியில் உள்ள கல்குவாரியில் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது நல்லதம்பிக்கு சொந்தமான கல்குவாரியில் கல் உடைப்பதற்கு பயன்படுத்தப்படும் வெடிபொருட்கள் அதாவது ஜெலட்டின் மற்றும் டெட்டனேட்டர்கள் கட்டுக்கட்டாக இருந்தது.
இதனை அரும்பாவூர் போலீசார் பறிமுதல் செய்ய வருவாய் கோட்டாட்சியர் விஸ்வநாதன் உத்தரவிட்டார். இதனைத் தொடர்ந்து அரும்பாவூர் போலீசார் வழக்கு பதிவு செய்து வெடி பொருட்களை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த வெடி பொருட்கள் பறிமுதல் செய்தபோது வேப்பந்தட்டை வட்டாச்சியர் பொன்னுதுரை மற்றும் வருவாய் துறையினர்கள் உடனிருந்தனர்.